Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் வீணாவதைத் தடுப்பது எப்படி? வல்லுநர் குழு ஆய்வு

Print PDF

தினமணி            26.09.2013 

குடிநீர் வீணாவதைத் தடுப்பது எப்படி?  வல்லுநர் குழு ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சியில் குடிநீர் வீணாவதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து ஜெர்மன் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களின் வல்லுநர் குழுவினர் புதன்கிழமை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

 ஜெர்மன் பல்கலைக்கழகமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து இந்த ஆய்வுப் பணியைத் தொடங்கி உள்ளன. இவ்விரு பல்கலைக்கழகங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் முறையே ரொடால்ஸ், வாசுதேவன் ஆகியோர் தலைமையிலான வல்லுநர் குழுவினர் திருவண்ணாமலைக்கு புதன்கிழமை வந்தனர்.

 தொடர்ந்து, நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பா.விஜயலட்சுமி, பொறியாளர் டி.ஜோதிமணி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 நீரேற்று நிலையத்தில் ஆய்வு: பின்னர், சாத்தனூர் அணையில் இருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நீரேற்று நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது.

 இப்பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடிநீரை வீணாகாமல் கொண்டு வருவது எப்படி என்றும், திருவண்ணாமலையில் உள்ள பெரிய பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் வீணாகாமல் விநியோகம் செய்வது எப்படி என்பது குறித்தும் இக் குழு ஆய்வு மேற்கொள்ளும். 2-வது நாளாக தொடர்ந்து வியாழக்கிழமையும் இக் குழுவினர் ஆய்வு மேற்கொள்வர்.

 நேரடியாக கள ஆய்வுப் பணியில் ஈடுபடும் இக் குழுவினர் எங்கெங்கு குடிநீர் வீணாகிறது என்பதையும், அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த அறிவுரைகளை நகராட்சி அதிகாரிகளுக்கு வழங்குவர். வல்லுநர் குழு அளிக்கும் அறிவுரைகளைப் பின்பற்றி குடிநீர் வீணாவது தடுக்கப்படும் என்று திருவண்ணாமலை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.