Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"மூலிகை உணவகம்' தயாராகிறது உணவே மருந்து : மும்முர பணியில் மாநகராட்சி

Print PDF

தினமலர்             08.10.2013

"மூலிகை உணவகம்' தயாராகிறது உணவே மருந்து : மும்முர பணியில் மாநகராட்சி

கோவை : கோவை மாநகராட்சியில் மூலிகை உணவகம் அமைக்க, மகளிர் குழுவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது; கட்டடம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததும், உணவகம் துவங்கப்படுகிறது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைப்பதற்கு, நகர் நல அலுவலர் அருணா தலைமையில் மருத்துவர்கள் குழு, சென்னை மாநகராட்சியிலுள்ள மூலிகை உணவகத்தை பார்வையிட்டனர்.

கோவையில் மூலிகை தாவரங்கள் அதிகளவில் கிடைப்பதால், இங்கும் மூலிகை உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டது. கோவையில் கிடைக்கும் தாவரங்களின் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் தயாரிக்க மகளிர் குழுவுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டது.மூலிகை உணவு வகைகள் தயாரிப்பதில் அனுபவம் மிக்க மூன்று மகளிர் குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், ஒரு குழுவுக்கு அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் பின்பகுதியில், வாகனங்கள் நிறுத்தும் இடத்திலுள்ள பழைய கட்டடம், மூலிகை உணவகத்திற்காக, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடைந்ததும், மூலிகை உணவகம் துவங்கப்படும், என, தெரிகிறது.மூலிகை உணவகத்தில், காலை நேரத்தில், கருவேப்பிலை இட்லி, ஆவாரம்பூ இட்லி, துளசி இட்லி, தினை மற்றும் சாமை இட்லி வகைகள், முருங்கைக்கீரை, நவதானியம் மற்றும் முசுமுசுக்கை வகை அடைகளும், குழிப் பணியாரம், கருப்பட்டி பணியாரம் போன்றவையும் சமைக்கப்படுகிறது.

உளுந்து களி, சுக்கு களி, தினை மற்றும் எள் உருண்டை, இயற்கை லட்டு, சைவ ஆம்லெட் வகைகள், மூலிகை டீ, மூலிகை சூப் வகைகளும், மூலிகை பழரசங்களும் சமைக்கப்படுகிறது.
மதிய நேரத்தில் புழுங்கல் அரிசி சாப்பாடு, ஆவாரம்பூ, முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை சாம்பார் வகைகள்; கொள்ளு, வேப்பம்பூ மற்றும் மணத்தக்காளி ரச வகைகள்; சுண்டை வற்றல், பூண்டு காரக்குழம்பு வகைகள்; இஞ்சி மற்றும் கருவேப்பிலை மோரும்; பிரண்டை, கொள்ளு, தூதுவளை துவையல் வகைகள் தயாரிக்க பயிற்சி பெற்றுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மூலிகை உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதால், கோவையில் அமைக்கப்படுகிறது. இதற்கு, ஆக., மாதம் நடந்த கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. உணவகத்திற்கு தேவையான சமையல் பாத்திரங்கள் மாநகராட்சி மூலம் வாங்கி கொடுக்கப்படும். உணவு வகைகள் தயாரிப்பதற்கான தானியங்கள், காய்கறிகள் மகளிர் குழுவினர் கொள்முதல் செய்து, உணவு வகைகளை வியாபாரம் செய்து கொள்ள வேண்டும். கட்டுமான பணிகள் 20 நாட்களில் முடிந்ததும், உணவு வகைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, உணவகம் திறக்கப்படும்' என்றனர்.

தினமும் 500 பேருக்கு : ""கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர் பணியாற்றுகின்றனர். கவுன்சிலர்கள், மண்டல பணியாளர்கள், பொதுமக்கள் என, தினமும் 500 பேர் அலுவலகத்திற்கு பணி நிமித்தகமாக வந்து செல்கின்றனர். பிரதான அலுவலகத்தில் மூலிகை உணவகம் அமைத்தால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு போன்ற நோயாளிகள் பயனடைவர். அலுவலகத்துக்கு வருவோருக்கும் ஆரோக்கியமான உணவு வகைகள் கிடைக்கும் என்பதால், இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துகிறது,'' என, துணைக் கமிஷனர் சிவராசு தெரிவித்தார்.