Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பழமையான போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்: பேரூராட்சியிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர்          23.10.2013

பழமையான போலீஸ் ஸ்டேஷன் கட்டடம்: பேரூராட்சியிடம் ஒப்படைப்பு

உடுமலை:உடுமலை அருகே பழமை வாய்ந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டடத்தை நினைவுச்சின்னமாக பயன்படுத்த நினைத்த போலீஸ் உயர் அதிகாரிகள் கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே தளியில், தாலுகாவின் முதல் போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. தளி ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், 12.05 சென்ட் பரப்பில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., அறை, ஆவணம் மற்றும் கைதி அறை உட்பட ஐந்து அறைகளுடன் கூடிய ஓட்டுக்கட்டடத்தில் ஸ்டேஷன் இயங்கி வந்தது.

போதிய பராமரிப்பு இல்லாததால், ஸ்டேஷன் கட்டடம்தள்ளாட துவங்கியது. இதனையடுத்து, கடந்த 2009ம் ஆண்டு இறுதியில் புதிய கட்டடம் கட்ட அரசு 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, புதிய கட்டடத்திற்கு ஸ்டேஷன் இடம் மாற்றப்பட்டது. புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட போது, ஆய்விற்கு வந்த அப்போதைய ஐ.ஜி., சிவனாண்டி பழைய கட்டடத்தை இடிக்காமல், நினைவுச்சின்னமாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். போலீசாரின் பழைய நடைமுறைகள், கட்டட அமைப்பு, தாலுகாவின் பழமை ஆகியவற்றிற்கு உதாரணமாக கட்டடத்தை நினைவு சின்னமாக பராமரிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தளி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடி காரணமாக தளி பேரூராட்சி நிர்வாகம் பழைய ஸ்டேஷன் இடத்தை தங்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

பழைய ஸ்டேஷன் கட்டடத்தை இடித்து விட்டு, அங்கு பஸ் ஸ்டாப் அமைக்கவும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து எம்.எல்.ஏ., அரசுக்கு விடுத்த கோரிக்கை அடிப்படையில், பேரூராட்சிக்கு சம்பந்தப்பட்ட இடம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில், பஸ் ஸ்டாண்ட் கட்ட பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு, பேரூராட்சி நிர்வாகத்தின் கோரிக்கை நிறைவேறியுள்ள நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகளின் நினைவு சின்னத்திற்கான கனவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.