Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ரூ.25 கோடியில் கட்டும் பணி துவக்கம்

Print PDF

தினகரன்           29.10.2013

கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் ரூ.25 கோடியில் கட்டும் பணி துவக்கம்

ஈரோடு, : ஈரோடு கருங்கல்பாளையம் - பள்ளிபாளையம் இடையே சாலை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி நேற்று துவங்கியது.

ஈரோடு கருங்கல்பாளையத்தையும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1961ல் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. நாமக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூர், ராசிபுரம், திருச்செங்கோடு, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், விழுப்புரம், சென்னை, வேலூர் போன்ற பகுதிகளுக்கு ஈரோட்டிலிருந்து செல்லும் மக்கள் பெரும்பாலும் இந்த பாலத்தின் வழியாகவே செல்வதால் எப்போதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். எனவே காவிரி ஆற்றின் குறுக்கே மேலும் ஒரு பாலம் புதிதாக கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இக்கோரிக்கையை ஏற்று நபார்டு வங்கி உதவியுடன் ரூ.25 கோடி செலவில் புதிதாக பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடந்தது. விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று தொழில்துறை அமைச்சர் தங்கமணி, பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசியதாவது: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஈரோடு- பள்ளிபாளையம் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே நபார்டு வங்கி உதவியுடன் ரூ.25.14 கோடி செலவில் புதிதாக பாலம் கட்டுவதன் மூலம் இம்மாவட்ட மக்களும், அண்டை மாவட்ட மக்களும் பெரிதும் பயனடைவார்கள்.

அதிமுக., அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து சாலை விரிவாக்கப்பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. ஈரோட்டிலிருந்து பள்ளிபாளையம், திருச்செங்கோடு வழியாக ராசிபுரம் வரை, ஈரோட்டிலிருந்து காங்கயம் வழியாக தாராபுரம் வரை, பவானியில் இருந்து தொப்பூர் வரை, ப.வேலூரில் இருந்து தாரமங்கலம் வழியாக ஓமலூர் வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

இதேபோல ஈரோடு அரசு மருத்துவமனை அருகே ரூ.50 கோடி செலவில் மேம்பாலம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு திண்டல் வரையிலும் புறவழிச்சாலை அமைக்கும் பணியும், ஈரோடு- சித்தோடு, ஈரோடு- பவானி ஆகிய பகுதிகளை இணைத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது.

மேலும் நாமக்கல் மாவட்டம் எஸ்பிபீ., காலனிக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் அடிக்கடி மழைநீர் தேங்குவதால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக ரூ.40 கோடி செலவில் பாலம் அமைக்கும் பணியும், நாமக்கல் மாவட்டம் மோகனூர்- கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை இணைக்க காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் பாலம் கட்டும் பணியும் விரைவில் துவங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் சாலைகள் சீரமைப்பு பணிக்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாபரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, மண்டல தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.