Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சி புதிய கட்டிடத்தில் இன்று "முதல்' கூட்டம் நடத்த முடிவு

Print PDF

தினமலர்        30.10.2013

கரூர் நகராட்சி புதிய கட்டிடத்தில் இன்று "முதல்' கூட்டம் நடத்த முடிவு

கரூர்: கடந்த தி.மு.க., ஆட்சியில், ஒரு கோடியே, 45 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட, புதிய கரூர் நகராட்சி கட்டிடத்தில், இன்று காலை நகராட்சி கூட்டம் நடக்கும், என, எதிர் பார்க்கப்படுகிறது. புதிய கட்டிடத்தில் முதல் கூட்டம் என்பதால், இன்றைய நகராட்சி கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், 82 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெத்தாச்சி கட்டிடத்தில் நடந்து வந்தது. கடந்த தி.மு.க., ஆட்சியில். பழைய நகராட்சி கட்டிட வளாகத்தில், ஒரு கோடியே, 45 லட்ச ரூபாய் செலவில், கரூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதை அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலின், கடந்த, 2010ம் ஆண்டு, நவம்பர் மாதம் திறந்து வைத்தார்.

கடந்த, 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் உத்தரவுபடி புதிய நகராட்சி கட்டிடம் பூட்டப்பட்டது. சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோற்றது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த நிலையில், புதிய நகராட்சி கட்டிடத்தை திறக்கக்கோரி, தி.மு.க.,வைச் சேர்ந்த அப்போதைய நகராட்சி தலைவர் சிவகாம சுந்தரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் புதிய கட்டிடம் திறக்கப்படாததால், தலைவர் சிவகாமசுந்தரி உள்பட தி.மு.க., கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தொடர்ந்து கடந்த, 2011 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் நகராட்சி தலைவராக முதன் முறையாக வெற்றி பெற்றார். அ.தி.மு.க., ஆளும் கட்சியாக இருப்பதால், புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த, இரண்டாண்டுகளாக கரூர் நகராட்சி கூட்டம், பழைய பெத்தாச்சி கட்டிடத்தில் தான் நடந்து வந்தது.

இதனால் பூட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் சிதிலம் அடையும் நிலையில் உள்ளதால், அதில் நகராட்சி கூட்டம் நடத்த வேண்டும் என, நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து புதிய நகராட்சி கட்டிடத்தை பார்வையிட்ட நகராட்சி தலைவர் செல்வராஜ், ""புதிய கட்டிடத்தில் சில இடங்களில் உதய சூரியன் சின்னம் மாதிரி டிசைன் செய்யப்பட்டுள்ளது. தரையில் போடப்பட்ட டைல்ஸ்கள் உடைந்த நிலையில் உள்ளது. மேல் தளங்களில் நீர்க்கசிவு உள்ளது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, பணிகள் முடிந்த பிறகு, முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி புதிய கட்டிடம் திறக்கப்படும்,'' என்றார்.

முதல் கட்டமாக புதிய கட்டிடத்துக்கு பர்னிச்சர் பொருட்கள் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக, 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, புதிய கட்டிட சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பழைய நகராட்சி கட்டிடத்தில் இருந்து, சில அலுவலகங்கள் புதிய கட்டிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. புதிய கூட்ட அரங்கில், 48 கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் நிருபர்கள் அமர சேர்கள் போடப்பட்டது. மேலும், ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் தனித்தனியாக மைக் வசதி செய்யப்பட்டது.

ஆகையால், கரூர் நகராட்சி தலைவராக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்வராஜ் பொறுப்பேற்று, கடந்த, 25ம் தேதியுடன் இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், இன்று புதிய கட்டிடத்தில் நகராட்சி கூட்டம் நடக்கும் என தெரிகிறது. இந்த சாதாரண கூட்டத்தில் மட்டும், 73 தீர்மானங்கள், நிறைவேற்றுவதற்காக கூட்டத்தில் இடம் பெறுகிறது.

"ஸ்பெஷல்' தீர்மானங்கள்

கரூர் நகராட்சி கூட்டத்தில், வழக்கமாக சாதாரண கூட்டத்துக்கு பிறகு, அவசர கூட்டம் பெரும்பாலும் தொடர்ந்து நடக்கும். அதில் முக்கிய தீர்மானங்கள் திடீரென படிக்கபட்டு நிறைவேற்றப்படும். இன்று நடைபெறவுள்ள, மூன்றாமாண்டு துவக்க விழா நகராட்சி கூட்டத்தில், அவசர கூட்டம் என்ற பெயரில் "ஸ்பெஷல் தீர்மானங்கள்' நிறைவேற்றப்படும், என எதிர்பார்க்கப்படுகிறது.