Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குறைதீர் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வால் மகிழ்ச்சி

Print PDF

தினமலர்           07.11.2013

மாநகராட்சி குறைதீர் முகாமில் 17 மனுக்களுக்கு உடனடி தீர்வால் மகிழ்ச்சி

திருச்சி: மாநகராட்சி சார்பில் நடந்த குறைதீர் முகாமில், வெறும், 35 பேர் மட்டுமே பங்கேற்றது, அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமில், 17 பேரின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், மக்களை தேடிச் சென்று, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பல்வேறு மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள், வார்டு வாரியாக குறைதீர் முகாம் நடத்தி, அதன்மூலம், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில், மக்களை தேடிச் சென்று அடிப்படை தேவைகளையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும், குறைதீர் முகாம், நேற்று காலை, 10 மணி முதல், மதியம், 2 மணி வரை, நடந்தது.

ஸ்ரீரங்கம் தேவி திருமண மண்டபத்தில் நடந்த குறைதீர் முகாமில், மாநகராட்சியின், 1, 2, 3 ஆகிய வார்டு மக்கள் பங்கேற்று, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை, 10 மணிக்கு குறைதீர் முகாம் துவங்கியது.

திருச்சி மாநகராட்சி மேயர் ஜெயா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில், மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் லதா, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி கமிஷனர் ரங்கராஜன், கவுன்சிலர்கள் தமிழரசு, முத்துலட்சுமி, பச்சையம்மாள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து நடந்த குறைதீர் முகாமில், காலை, 11.30 மணி வரை, சொற்ப எண்ணிக்கையிலேயே மக்கள் பங்கேற்றனர். இதனால் மேயரும், மாநகராட்சி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

மொத்தத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில், 35 பேர் மட்டும் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்து, மேயர் ஜெயாவிடம் மனு அளித்தனர். முகாமில் பெறப்பட்ட, 35 மனுக்களில், 17 மனுவுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இது மனு அளித்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறைதீர் முகாமில், பத்து பேருக்கு, புதிய சொத்து வரி விதிப்பு, மூவருக்கு, பிறப்பு சான்றிதழ், இருவருக்கு, இறப்பு சான்றிதழ், இருவருக்கு, சர்வே வரைபடம் வழங்குதல் என, 17 பேரின் மனுக்களுக்கு, உடனடி தீர்வு காணப்பட்டது. மீதியுள்ள, 18 மனுக்களை ஆய்வு செய்து, அவற்றின் மீது குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசுமை திட்டம்

ஸ்ரீரங்கத்தில் நடந்த மாநகராட்சி குறைதீர் முகாமில் பங்கேற்ற மக்களில் சிலர், தங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களுக்கு பசுமை திட்டத்தின் படி, மேயர் ஜெயா மரக்கன்றுகள் வழங்கினார். அவற்றை உரிய இடத்தில் நட்டு வைத்து, சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று, மரக்கன்று பெற்ற மக்களுக்கு மேயர் அறிவுறுத்தினர்.