Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

13 ஆண்டுகளுக்கு பின் இளம் ஐ.ஏ.எஸ்., கமிஷனர்

Print PDF

தினமலர்         18.11.2013 

13 ஆண்டுகளுக்கு பின் இளம் ஐ.ஏ.எஸ்., கமிஷனர்

மதுரை : மதுரை மாநகராட்சியில் தொடர் சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட, 13 ஆண்டுகளுக்கு பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவகங்கை கூடுதல் கலெக்டர் கிரண்குராலாவை, 35, கமிஷனராக அரசு நியமித்துள்ளது.சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சி மதுரை. ஆனாலும், மதுரையை பெரிய அளவில் அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குறை இருந்தது.

குறிப்பாக, நிர்வாக தரப்பில் நடந்த அதிகாரிகள் நியமனத்தில், கடந்த 2 ஆண்டுகளில் சொல்லும்படியாக அதிகாரிகள் யாரும் செயல்படவில்லை. மாறாக, சர்ச்சைகளிலும், முறைகேடுகளிலும், புகார்களிலும் சிக்கியவர்களாகவே வந்து சென்றனர். இதனால், முதன் முறையாக மாநகராட்சி நிர்வாகத்தை கைப்பற்றிய அ.தி.மு.க., நெருக்கடியையும், விமர்சனத்தையும் சந்திக்க நேர்ந்தது. கமிஷனராக இருந்த நந்தகோபால், வேலூர் கலெக்டராக மாற்றப்பட்ட பின், புதிய கமிஷனர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

துணை கமிஷனர் லீலா, கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். முன்பு, நடராஜன் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்ற பின், 6 மாதங்களுக்கு கமிஷனர் நியமனம் நடைபெறவில்லை. "இந்த முறையும், அதேபோல்தான் நடக்கும்,' என்ற பேச்சு இருந்தது. இது ஒருபுறமிருக்க, கமிஷனர் பணியிடத்தை பெற, பலர் போட்டி போட்டனர். இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று, மாநகராட்சியின் புதிய கமிஷனராக கிரண் குராலா நியமிக்கப்பட்டார். 2002 ஜூன் 13 முதல் 2005 ஜன.,12 வரை பணியாற்றிய கார்த்திக்தான், மாநகராட்சியின் கடைசி நேரடி ஐ.ஏ.எஸ்., இளம் அதிகாரி; அதன் பின் வந்த நடராஜன், நந்தகோபால் ஆகியோர் பணிமூப்பு அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்றவர்கள்.

மாநகராட்சி சந்தித்து வரும் தொடர் சர்சைகளுக்கு முடிவு கட்டவே, 13 ஆண்டுகளுக்கு பின், நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளனர். கிரண் குராலாவிடம் கேட்ட போது ,""நியமனம் குறித்து, இப்போது தான் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. பொறுப்பேற்கும் நாள் குறித்து, நாளை (இன்று) தான் தெரியவரும்; உரிய பணியை மேற்கொள்வேன்,'' என்றார். இவர், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர். 2009ல் ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வு பெற்றார். சிவகங்கைக்கு முன் கடலூர் சப்கலெக்டராக இருந்தார்.

வேலை செய்தது லீலா கடிதம்: மாநகராட்சி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனித்த துணை கமிஷனர் லீலா, ஆய்வுக்கு பிறகே, தன்னிடம் வரும் ஆவணங்களிலும், அனுமதி கோப்புகளிலும் கையெழுத்திட்டார். பொறுப்பு வகித்த சில வாரங்களிலேயே, மாநகராட்சியின் நிலவரங்களை புரிந்து கொண்டார்.

முறைகேடான கடைகளுக்கு அனுமதிகேட்டு கவுன்சிலர் ஒருவர் அணுகிய போது, "விதிமுறை மீறி, நீங்கள் செயல்பட்டால், மேடத்திற்கு(முதல்வர்) கடிதம் அனுப்பிவிடுவேன்,' என எச்சரித்தார். ஒரு கட்டத்தில், மாநகராட்சியில் நடப்பதை அரசுக்கு தெரிவிக்க முடிவு செய்த லீலா, சில திட்டங்களில் நடந்த முறைகேடு, பணியாளர் நியமன முறைகேடுகள் குறித்து, அரசுக்கு கடிதம் அனுப்பினார். அதன் வெளிப்பாடுதான், "கறார்' கமிஷனர் நியமனம் நடந்துள்ளது.