Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"வானமே கூரை' மக்களை மீட்க திட்டம்! நவ., 24ல் கணக்கெடுப்பு துவக்கம்

Print PDF

தினமலர்          19.11.2013

"வானமே கூரை' மக்களை மீட்க திட்டம்! நவ., 24ல் கணக்கெடுப்பு துவக்கம்

கோவை:கோவை மாநகரத்தில், ரோட்டோர பிளாட்பாரங்களில் தங்குவோரை மீட்டு, மாநகராட்சி மூலம் காப்பகம் அமைத்து, பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி, நவ., 24ல் துவங்குகிறது.

கோவை மாநகரத்தில், ஆதரவற்றோர், பிச்சை எடுப்பவர்கள், மனநலம் பாதித்தவர்கள் சாலையோர நடைபாதைகளை வாழிடமாக கொண்டுள்ளனர்.

அவர்கள் மீட்டு, காப்பகத்தில் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. கோவை மாநகரத்தில் கணக்கெடுத்தபோது, 385 பேர் எவ்வித ஆதரவும் இல்லாமல், ரோட்டோரத்தில் வாழ்வது கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ரோட்டோர பிளாட்பாரங்களில் வசிக்கும் வீடற்றோர்களை கணக்கெடுத்து, புதிதாக காப்பகங்கள் கட்டி, அவர்களை பராமரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசு, 75 சதவீதம் நிதியும், மாநில அரசு 25 சதவீதம் நிதியும் வழங்குகிறது.

கோவையில், ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி காப்பகத்தில் 100 பேர் பராமரிக்கப்படுகின்றனர். இதேபோன்று, பூசாரிபாளையம் சமுதாயக்கூடம், கணபதி மற்றும் ரங்கே கவுடர் வீதி அருகிலுள்ள பட்டுக்கார நூல்சந்து ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி கட்டடத்தில், காப்பகங்கள் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இணைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, மாநகராட்சி நகர் நல அலுவலர் மற்றும் சமுதாய அமைப்பாளர்கள் சென்னையில் பயிற்சி பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

இன்றும், நாளையும் ரோட்டோரத்தில் தங்கும் ஆதரவற்றோர்களை கணக்கெடுப்பது குறித்த களப்பயற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின், வரும் 24ம் தேதி முதல் டிச., 1ம் தேதி வரையிலும், வீடற்றோர் கணக்கெடுப்பு பணி துவங்கப்படுகிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கணக்கெடுப்பு முடிந்ததும், கோவையில் எந்தெந்த நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் (வயது வாரியாக) என்பதை அரசுக்கு தெரிவித்து, செயல்திட்டம் துவங்கப்படும். மாநகர எல்லைக்குள்ளும், மாநகர எல்லையில் இருந்து 3 கி.மீ..,க்குள்ளும் காப்பகம் அமைக்கலாம்' என்றனர்.

கணக்கெடுப்பு பணிக்கு, மொத்தம் 12 குழுக்கள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும், மாநகராட்சி சார்பில் சமுதாய அமைப்பாளர் ஒருவரும் இடம் பெறுகின்றனர்.