Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய கமிஷனர் பொறுப்பேற்கும் முன்பே சுறுசுறுப்பு: அலுவலகத்தில் ஒன்று திரண்ட அதிகாரிகள்

Print PDF

தினமலர்          19.11.2013

புதிய கமிஷனர் பொறுப்பேற்கும் முன்பே சுறுசுறுப்பு: அலுவலகத்தில் ஒன்று திரண்ட அதிகாரிகள்

மதுரை : மதுரை மாநகராட்சிக்கு இளம் ஐ.ஏ.எஸ், அதிகாரியை நியமித்த அறிவிப்பு வெளியான மறுநாளே, சுறுசுறுப்பான சூழலுக்கு அலுவலகம் மாறியது. அதிகாரிகள் அனைவரும் ஆஜரானதால், காற்றாடிய அறைகள் நேற்று நிரம்பி வழிந்தன. கமிஷனர் நந்தகோபால் மாறுதலுக்கு பின், ஒரு மாதமாக காலியாக இருந்த கமிஷனர் பணியிடத்தில், இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான கிரண் குராலாவை,35, நேற்று முன்தினம் அரசு நியமித்தது.

முன்னதாக, "நகராட்சிகளின் நிர்வாக பிரிவின் அதிகாரிகளில் ஒருவர் தான், கமிஷனராக பொறுப்பேற்பார்,' என்ற தகவல் உலா வந்ததால், அதிகாரிகள் பலரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

எதிர்பாராதவிதமாக, 13 ஆண்டுகளுக்கு பின் நேரடி ஐ.ஏ.எஸ்., அதிகாரியை அரசு நியமித்தது, மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கு மீறிய கூடுதல் பொறுப்பு, வேண்டியவர்களுக்கு வேண்டிய இடத்தில் பணி நியமனம் உள்ளிட்ட நிர்வாக குளறுபடி நிறைய இருப்பதால், புதிய கமிஷனரின் செயல்பாடு குறித்து கவலை அடைந்துள்ளனர். சில மாதங்களாக வெறிச்சோடிய மாநகராட்சி அலுவலக வளாகம், அனைத்து அதிகாரிகளும் அலுவலகம் வந்ததால், நேற்று சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாநகராட்சிக்கு அதிகாரிகளுக்கு வழங்கிய வாகனத்தின் எண்ணிக்கையை, நேற்று தான் காணமுடிந்தது.

கமிஷனர் பொறுப்பேற்றதும், அவருக்கு அளிக்க வேண்டிய தகவல்களுக்கு தயாராக சிலரும், ஆவணங்களில் உள்ள குளறுபடிகளை கமிஷனர் பொறுப்பேற்கும் முன் சரிசெய்ய சிலரும், நேற்று அலுவலகம் வந்தனர். தற்போது கமிஷனர் பொறுப்பை கவனித்து வரும் துணை கமிஷனர் லீலாவிடம், சில ஆவணங்களுக்கு கையெழுத்து பெற சென்ற போது, ""புதிய கமிஷனர் நியமிக்கப்பட்ட பின், நான் கையெழுத்திடுவது முறையல்ல; அவர் வந்து, சரிபார்த்த கையெழுத்திடுவார்,'' என, அவர் மறுத்ததால், சிலர் பீதியடைந்துள்ளனர். முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சிலர் ஒன்று கூடி, புதிய கமிஷனர் குறித்து கலந்துரையாடினார். பரபரப்பான இந்த சூழலில், கமிஷனர் கிரண் குராலா நாளை பொறுப்பேற்கிறார்.