Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

Print PDF

தினபூமி         21.11.2013

ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம்: முதல்வர் திறந்து வைத்தார்

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Chennai-Amma-Mess-CM_Inagurate(C).jpg 

சென்னை, நவ.21 - சென்னை அரசு ஆஸ்பத்திரியில்  அம்மா உணவகத்தை    முதல்வர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:_

சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் அம்மா உணவகங்கள் முதல்_அமைச்சர் ஜெயலலிதாவால் 19.2.2013 அன்று தொடங்கி வைக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா உணவகங்கள் ஏழை எளிய மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி, பொங்கலுடன் சாம்பாரும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம், தயிர்சாதம், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் சென்னை, அரசு பொது மருத்துவமனையிலும் ஒரு அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்று மருத்துவமனைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கோரியிருந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும், அதிக அளவில் ஏழை, எளிய மக்கள் வந்து செல்லும் மருத்துவமனை என்பதைக் கருத்தில் கொண்டும், சென்னை, அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5100 சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் சாப்பிடும் வகையிலும், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல சாய்வு தளம் அமைத்தும், அவர்கள் சிரமமின்றி அமர்ந்து சாப்பிடும் வகையில் தாழ்வான மேஜை உள்ளிட்ட வசதிகளுடன் அம்மா உணவகம் அமைத்திட முதல்_அமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டார். அதன்படி, புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த அம்மா உணவகத்தை முதல்_அமைச்சர் ஜெயலலிதா நேற்று  காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.