Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ரத்தினபுரி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Print PDF

தினகரன்            22.11.2013

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ரத்தினபுரி பள்ளி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

கோவை, :  மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி முதலிடத்தை பிடித்து, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள், கோவை நேரு மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, 41 மாநகராட்சி பள்ளிகளை சேர்ந்த 531 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் என, வயது வாரியாக மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. 100 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ரிலே உள்ளிட்ட தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த தடகள போட்டிகளில் வீரர்களுக்கான, 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில், கோவை ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்று, மூன்று பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தது.

வீராங்கனைகளுக்கான தடகள போட்டிகளில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி பிரிவில் கோவில்மேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி பிரிவில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தது.

அதே போல், மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையில் டோரல்மென்ட் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், த்ரோ-பால் போட்டி வீராங்கனைகளுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பிடித்தது. வாலிபால் போட்டி வீரர்களுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி முதலிடத்தை பிடித்தது.

கோகோ போட்டி வீரர்களுக்கான பிரிவில், 14 வயதுக்கு உட்பட்டோரில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியும், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆர்.எஸ்.புரம் பெண்கள் பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியும் முதலிடத்தை பிடித்தது.

கபடி போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கோவில்மேடு மாநகராட்சி பள்ளியும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வடகோவை மாநகராட்சி பள்ளியும் முதலிடத்தை பிடித்தது. 

தடகளம் மற்றும் டோரல்மென்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, ரத்தினபுரி மாநகராட்சி பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாநகர மேயர் வேலுசாமி பங்கேற்று, சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்த, ரத்தினபுரி மாநகராட்சி பள்ளிக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் லதா, துணை ஆணையாளர் சிவராசு, மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி பள்ளி அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.