Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி ‘ரிப்பன் மாளிகை’க்கு இன்று 100 வயது

Print PDF

மாலை மலர்         26.11.2013

சென்னை மாநகராட்சி ‘ரிப்பன் மாளிகை’க்கு இன்று 100 வயது
 
சென்னை மாநகராட்சி ‘ரிப்பன் மாளிகை’க்கு இன்று 100 வயது
சென்னை, நவ.26 - நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட சென்னை மாநகராட்சி ‘ரிப்பன் மாளிகை’ தனது 100-வது வயதினை கொண்டாட்டங்கள் இல்லாமல் இன்று (செவ்வாய்க்கிழமை) பூர்த்தி செய்கிறது. 1600-ம் ஆண்டுகளில் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் படிப்படியாக மதராசப்பட்டினத்தில் (அப்போதைய சென்னை பெயர்) தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.

அதன்படி, 1666-ம் ஆண்டு மதராசப்பட்டினத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக ஜார்ஜ் கிராவுட் என்ற ஆங்கிலேயர் பொறுப்பேற்றார். 1687-ம் ஆண்டு எலிகுயல் என்பவர் புதிய கவர்னராக பதவியேற்றார்.

இவர் கவர்னர் பதவியை தன்னிச்சையாக கொண்டு செயல்பட்டதால், அப்போது கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனராக இருந்த ஜோசய்யா சைல்டு, கவர்னர் எலிகுயலின் அதிகாரத்தை குறைக்க தனி நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து ஜேம்ஸ் இரண்டாம் மன்னர் நகராட்சி அமைக்க உரிமை சாசனம் வழங்கினார். அதன்படி, 1688-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மதராசப்பட்டினத்தில், மெட்ராஸ் நகராண்மை கழகம் உருவானது. இது தான் எதிர்காலத்தில் மாநகராட்சி உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.

மெட்ராஸ் நகராண்மை கழகத்தின் முதல் மேயராக நத்தேனியல் க்கன்சன் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்ச்சிக்கீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் என பல தரப்பட்ட பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை டவுன் ஹாலில் இயங்கி வந்த மெட்ராஸ் நகராண்மை கழக அலுவலகத்தை அரசு எடுத்துக்கொண்டதைதொடர்ந்து, 1882-ம் ஆண்டு சென்னை முத்தியால்பேட்டை எர்ரபாலு செட்டி தெருவுக்கு நகராண்மை கழக அலுவலகம் மாற்றப்பட்டது.

சில ஆண்டுகளிலேயே அந்த இடம் போதவில்லை என்பதால், நகராண்மை கழகத்துக்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் தான் தற்போது சென்னை மாநகராட்சியின் தலைமையிடமாக இயங்கி வரும் ரிப்பன் கட்டிடம். 1909-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி இக்கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்தோ-சாராசெனிக் கட்டிடக்கலையின் கீழ் ரூ.7.5 லட்சம் செலவில் சிறந்த கட்டிட கலை நிபுணர் லோகநாத முதலியார் 4 ஆண்டுகளில் கட்டுமான பணிகளை முடித்துக்கொடுத்தார். 252 அடிகள் நீளத்திலும், 126 அடிகள் அகலத்திலும், 132 அடி கோபுரத்துடன் கட்டப்பட்ட கட்டிடத்தை 1913-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி அப்போதைய வைசிராய் ஹார்டின்ஜ் திறந்து வைத்தார்.

இந்தியாவில் உள்ளாட்சி முறை கொண்டு வர முக்கிய காரணமாக இருந்த, ‘‘உள்ளாட்சி முறையின் தந்தை’’ என கருதப்படும் ‘ரிப்பன் பிரபு’ நினைவாக கட்டிடத்துக்கு ரிப்பன் கட்டிடம் என்று பெயர் சூட்டப்பட்டு, அவருடைய முழு உருவசிலையும் ரிப்பன் கட்டிட வளாகத்திற்குள் திறக்கப்பட்டது.

ரிப்பன் மாளிகை செயல்பட தொடங்கியபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் பி.எல்.மூர். 1919-ம் ஆண்டு மெட்ராஸ் நகர உள்ளாட்சி சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, 50 கவுன்சிலர்களைக் கொண்டு நகராண்மை கழகம் அமைக்கப்பட்டது.

30 வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஆணையாளர்களுக்கு தலைமை ஏற்க தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின் படி முதல் நகராண்மை கழக தலைவராக சர்.பிட்டி.தியாகராய செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1920-ம் ஆண்டு மான்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தால் நகராண்மை தலைவருக்கு நேரடி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் சர்.பிட்டி தியாகராயரே வெற்றி பெற்று தலைவர் ஆனார். 1933-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் படி, ‘தலைவர்’ என்ற பதவி ‘மேயர்’ (நகர தந்தை) என்று ஆனது.

நகரமைப்பை 40 வட்டங்களாகவும், நகராண்மை கழக உறுப்பினர்கள் எண்ணிக்கை 60 ஆகவும் உயர்த்தப்பட்டது. நகராட்சி உறுப்பினர்களிலிருந்து துணை நகர மேயர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரம் 1936-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதன்படி முதல் துணை மேயராக எம்.பக்தவச்சலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973-ம் ஆண்டுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மூலம் ஆண்டுக்கு ஒரு முறை மேயரை தேர்ந்தெடுப்பதற்காக செயல்பட்ட அமைப்பு, 1973-ம் ஆண்டு மாநகராட்சி வரலாற்றில் ஏற்பட்ட சலசலப்பு கலைக்கப்பட்டது.

அன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுகை குழு இல்லாமல், தனி அலுவலர்களின் மேற்பார்வையில் 1996-ம் ஆண்டு வரை (23 ஆண்டுகள்) செயல்பட்டு வந்தது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு, அதாவது 23 ஆண்டுகளுக்கு பிறகு அப்போதைய மாநில அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் மாநகராட்சி மன்றம் செயல்பட தொடங்கியது.

மாநகராட்சியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒரு ஆண்டாக இருந்த மேயர் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டது. தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள், மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 326 ஆண்டு கால வரலாற்றில் இதுவரையில் 47 பேர் மேயராக இருந்துள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாக சென்னை மாநகராட்சி மேயர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றியது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் 48-வது மேயராக அ.தி.மு.க.வை சேர்ந்த சைதை துரைசாமி அக்டோபர் 31-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.

துணை மேயராக அ.தி.மு.க.வை சேர்ந்த பா.பெஞ்சமினும், கமிஷனராக விக்ரம் கபூரும் உள்ளனர். 1913-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி செயல்பட தொடங்கிய சென்னை நகரின் ‘வெள்ளை மாளிகை’ என்று அழைக்கப்படும், சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ‘ரிப்பன் மாளிகை’ இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 100-வது வயதினை எந்தவித ஆரவாரம் இல்லாமல் பூர்த்தி செய்கிறது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவை, அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கியும், அரசு-மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச மெத்தைகள் உள்பட உபகரணங்கள் வழங்கியும், வீதிகள்தோறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் இலவச மருத்துவமுகாம்களை நடத்தி சீறும், சிறப்புமாக கொண்டாட சென்னை மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.

ஆனால் மெட்ரோ ரெயில் பணி காரணமாக ரிப்பன் மாளிகை புதுப்பிக்கும் பணியில் ஏற்பட்ட தொய்வால், குறிப்பிட்ட காலத்துக்குள் ரிப்பன் மாளிகையை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டது. இதனால் ரிப்பன் மாளிகை நூற்றாண்டு விழாவை சென்னை மாநகராட்சி தள்ளி வைத்துள்ளது.

ரூ.7 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் ‘ரிப்பன் மாளிகை’ பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் புதிய விரிவாக்கத்துடன்படி, புறநகர் பகுதிகளும் இணைந்து தற்போது சென்னை மாநகராட்சி 15 மண்டலமாகவும், 200 வார்டுகளாகவும் பரந்து விரிந்து செயல்படுகிறது.

அம்மா உணவகம், இலவச நொச்சி செடிகள், பப்பாளி கன்றுகள், மாணவர்களுக்கு போட்டி தேர்வு இலவச பயிற்சி போன்ற மாநகராட்சியின் திட்டங்கள் 100 வயதையும் பூர்த்தி செய்யும் ரிப்பன் மாளிகைக்கு மகுடமாக அமைந்துள்ளது.