Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புறவழி சாலையிலும் சென்னை பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி          30.11.2013

புறவழி சாலையிலும் சென்னை பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் வேண்டுகோள்

சென்னை பஸ்கள் ராணிப்பேட்டை புறவழி சாலையிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, நகரசபை கூட்டத்தில் உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.

நகரசபை கூட்டம்

ராணிப்பேட்டை நகரசபையின் சாதாரண கூட்டம், ஏ.பி.முகம்மது சுலைமான் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் சித்ரா சந்தோஷம் தலைமை தாங்கி பேசினார். துணைத்தலைவர் ஜே.பி.சேகர், நகரசபை மேலாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ராணிப்பேட்டை நகரசபைக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலையத்திற்கு செல்லும் பாதை நவ்லாக் ஊராட்சிக்கு சொந்தமானதாக உள்ளதால், அந்த பாதையை ஊராட்சியிடமிருந்து தானமாக பெற்று, பின்னர் அதை நகரசபையின் சார்பில் பராமரிக்க மன்றம் அனுமதிக்கலாம் என்ற தீர்மானத்தை தலைவர் கொண்டு வந்து முன்மொழிந்து பேசினார்.

அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:–

நோய் தடுப்பு முகாம்

தாமோதரன்:– கடந்த கூட்டத்திலேயே மணல் பிரச்சினை மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நிலை குறித்து பேசினேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷம்:– நாம் இடம் தேர்வு செய்து கொடுக்க முடியாது. பொதுப்பணித்துறை மூலம் குடிநீருக்கு பாதிப்பில்லாமல் மணல் அள்ள இடம் தேர்வு செய்து கொடுத்தால், அதை மன்றத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றி கொடுக்கலாம்.

இந்துமதி:– என்னுடைய வார்டில் நாய், குரங்கு தொல்லை உள்ளது. பழைய திருத்தணி ரோட்டில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

எழில்வாணன்:– நகரில் கால்நடைகளுக்கு கோமாரி நோயை தடுக்க நகரசபையின் சார்பில் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். நகரில் பாலாற்றை பாதுகாக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமும் நகரசபையின் சார்பில் பாலாற்றில் கழிவுநீர் கலந்து மாசாவதை தடுக்க தீர்மானமாவது போட வேண்டும்.

சந்தோஷம்:– தோல் கழிவுநீர் செல்வதை தடுக்க ராணிடெக் சுத்திகரிப்பு நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் கோமாரி நோய் இல்லை, கால்நடைகளுக்கு ஏற்கனவே முகாம் நடத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் நடத்தலாம். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க தீர்மானம் நிறைவேற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வேண்டுமானால் அனுப்பலாம்.

சென்னை பஸ்கள்

ஷாபுதீன்:– கழிவுநீர் நிலத்தில் செல்லாதவாறு பைப்லைன் அமைத்து மூடிய நிலையில் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அது நிறைவேற்றப்படவில்லை. பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை நடத்தியவர்கள் அரசியல் பின்புலத்தை கொண்டவர்கள்தான். ஆனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினரை பார்த்து அரசியல் ஆக்காதீர்கள் என கூறியுள்ளனர்.

சந்தோஷம்:– பாலாற்றை பாதுகாக்க அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை என கூறியதாக தெரிவித்தார். அந்த நடைபயணத்தில் இருந்த தோல் தொழில் அதிபர்கள் கழிவு தண்ணீரை வெளியேற்றாமல் இருக்கலாமே?

எஸ்.ஆர்.டி.சரவணன்:– ராணிப்பேட்டை ஒரு தொகுதி என்ற நிலையில் உள்ளது. ஆனால், சென்னை பஸ்கள் ராணிப்பேட்டைக்குள் வருவதில்லை. ஆற்காட்டில் பைபாஸ் சாலையில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. சென்னை பஸ்கள் வராததால் பொதுமக்கள் மிக சிரமப்பட்டு வருகின்றனர். ராணிப்பேட்டை புறவழி சாலையிலும் சென்னை பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்பழகன்:– என்னுடைய வார்டு பகுதியில் 90 சதவீதம் பேருக்கு காப்பீடு திட்டத்திற்கான அட்டை கிடைக்கவில்லை. அதேபோல் நகரசபையில் உள்ள கார்டுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் உறுப்பினர்கள் தாவுத்பாஷா, ரமேஷ்கர்ணா, மணிமேகலை, கீதா, ஜோதி சேதுராமன், ஜூலைகா, புவனேஸ்வரி, ராஜலட்சுமி, விமலா ஆகியோர் உள்பட நகரசபை அலுவலர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.