Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பேச்சு

Print PDF

தினத்தந்தி              20.12.2013

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி பேச்சு

பெண்கள் வலிமையான சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும், என்று மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி கூறினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சாலை பாதுகாப்பு படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்டங்கள் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை காமராஜர் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜே.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேராசிரியர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாராயணன், மாவட்ட தலைமை போக்குவரத்து காப்பாளர் ஜட்சன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

வலிமையான சமுதாயம்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி பேசியதாவது:–

பெண்கள் துணிச்சலாக செயல்பட வேண்டும். உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது. 50 ஆண்டுகளாக பெண் கல்வி நன்கு வளர்ச்சி அடைந்து உள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கு ஊடகங்களும் காரணம். வரதட்சணை, ஈவ்டீசிங், வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் தைரியமாக போராட வேண்டும். உளவியல் ரீதியாக மனவலிமை பெற வேண்டும். பெண்கள் தற்கொலை செய்வது என்பது பற்றி சிந்திக்கவே கூடாது.

இந்த கல்லூரி மாணவிகள் துணிச்சலானவர்கள் என்பதை நான் பலமுறை பார்த்து உள்ளேன். இங்கு வருவது எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இன்றைய பெண்கள் உயர் அதிகாரிகளாகவும், இல்லத்தரசிகளாகவும் வருகின்றனர். ஆகையால் நீங்கள் வலிமையான சமுதாயத்தை அமைக்க மனதை தயார்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உறுதி ஏற்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவர் திவாகர், பேராசிரியர் தேவராஜன், கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை ஜே.பூங்கொடி நன்றி கூறினார்.