Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் சாலையோரம் வசிப்போர் குறித்து...கணக்கெடுப்பு:தேனாம்பேட்டை, ராயபுரத்தில் இன்று துவக்கம்

Print PDF

தினமலர்             20.12.2013

சென்னையில் சாலையோரம் வசிப்போர் குறித்து...கணக்கெடுப்பு:தேனாம்பேட்டை, ராயபுரத்தில் இன்று துவக்கம்


சென்னை:மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பின், முதல் முறையாக, சென்னையில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிப்போர் குறித்து கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில், இன்று முதல், கணக்கெடுப்பு துவங்க உள்ளது.

சென்னையில் வீடுகள் இல்லாதோர், சாலை ஓரம், நடைபாதை, பேருந்து நிலையம், பூங்காக்கள், ரயில் நிலையங்களில், இரவில் படுத்து உறங்குகின்றனர்.11 ஆயிரம் பேர்:விரிவாக்கத்திற்கு முந்தைய சென்னை மாநகராட்சியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 11 ஆயிரம் பேர் சாலை ஓரத்தில் வசிப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்காக, தற்போது சென்னையில், 26 இரவு நேர காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

ஆனால், தினசரி இந்த இரவு காப்பகங்களில் படுத்து உறங்குவோர் எண்ணிக்கை, 800 முதல், 900 வரை மட்டுமே. மீதமுள்ளோர் இரவு காப்பகங்களுக்கு வருவதில்லை. இதற்கான காரணம் குறித்து அறியவும், விரிவாக்க பகுதிகளை சேர்த்து, வீடுகள் இல்லாதோர் எவ்வளவு பேர் என, கண்டறியவும், சென்னை மாநகராட்சி புதிய கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.

நான்கு மணி நேரம்:முதல்கட்டமாக தேனாம்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் இன்று முதல், கணக்கெடுப்பு துவங்குகிறது. இரவு, 8:00 முதல், 12:00 மணி வரை, நான்கு மணிநேரத்திற்கு இந்த கணக்கெடுப்பு நடக்கும்.ஐந்து நாட்களில், இரண்டு மண்டலங்களிலும் கணக்கெடுப்பு முடியும். தேனாம்பேட்டை மண்டலத்தில், மாநகராட்சி துப்புரவு அலுவலர்கள் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள், அடிப்படை சுகாதார பணியாளர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுவர். ராயபுரம் மண்டலத்தில் தொண்டு நிறுவனங்கள் மூலம் கணக்கெடுப்பு நடக்கும்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேனாம்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் தான் சாலையோரம் வசிப்போர் அதிகம். அதனால் அங்கு முதலில் கணக்கெடுக்கப்படுகிறது.

28 கேள்விகள்:இதில், 28 கேள்விகள் அடங்கிய ஒரு விண்ணப்பத்தை ஊழியர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். சாலையோர வாசியின் தனிப்பட்ட தகவல், நோய் பாதிப்பு, குடும்ப விவரம் உட்பட, அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும்.விரிவாக்க பகுதிகளுடன் சேர்த்து, புதிய கணக்கெடுப்பில், சாலை ஓரம் வசிப்போர், 20 ஆயிரத்திற்கும் மேல் இருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கெடுப்பை பொறுத்து, கூடுதலாக இரவு நேர காப்பகங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடி செலவு!

சென்னையில் இயங்கி வரும், 26 இரவு நேர காப்பகங்களில் தங்குவோருக்காக, உணவு, பாய், தலையணை, போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் வகையில், மாநகராட்சி, ஆண்டுக்கு, 1.5 கோடி ரூபாய் வரை செலவு செய்கிறது.சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு, ஒரு இரவு காப்பகம் இருக்க வேண்டும். அதன்படி, சென்னையில், 65 லட்சம் மக்கள் தொகைக்கு, 65 காப்பகங்கள் தேவை. தற்போது இருப்பவை, 26 தான். அடுத்த வாரம், மேலும், நான்கு காப்பகங்கள் திறக்கப்படுகின்றன.