Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் திட்டத்திற்கு நிதி: முதல்வருக்கு கோத்தகிரி பேரூராட்சி மன்றம் நன்றி

Print PDF

தினமணி             04.01.2014

குடிநீர் திட்டத்திற்கு நிதி: முதல்வருக்கு கோத்தகிரி பேரூராட்சி மன்றம் நன்றி

ஈளாடா குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கோத்தகிரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோத்தகிரி பேரூராட்சி தலைவர் சை.வாப்பு தலைமையில், பேரூராட்சிக் கூட்டம் நடைபெற்றது . செயல் அலுவலர் நா.பழனி, துணைத் தலைவர் சுந்தரி நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோத்தகிரி பகுதியின் குடிநீர் ஆதாரமான ஈளாடா குடிநீர் திட்டத்திற்கு ரூ.50 லட்சம் ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு கூட்டத்தில் ஒருமனதாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நடைபெற்ற விவாதம்:

கேஏபி.சீனிவாசன் (அதிமுக), ராஜேஸ்வரி வடிவேல் (மதிமுக): மார்க்கெட் பகுதியிலும் நகரிலும் நடைபாதை ஆக்கிரமிப்புகளையும், போக்குவரத்திற்கு இடையூறான ஆக்கிரமிப்புகளையும் அகற்றுவதோடு, ஏழை எளிய மக்களுக்கு அதற்குப் பதிலாக புதிய இடம் ஒதுக்க வேண்டும்.

கனகராஜ் (சுயே.), நடராஜ் (திமுக): டானிங்டன் பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் அது பூட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

டானிங்டன் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை அகற்றியதால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அதனை மீண்டும் அங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணன் (அதிமுக), ரவி (தேமுதிக): கோத்தகிரி மார்க்கெட்டில் இறைச்சிகள் சுகாதாரமின்றி விற்கப்படுகின்றன. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

கண்ணன் (அதிமுக):  கோத்தகிரி புயல் நிவாரண மண்டப பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. அந்தப் பணிக்கு பதிலாக அதன் ஒப்பந்ததாரர் அங்கேயே வேறு பணிகளை செய்வதோடு பேரூராட்சி கணக்கில் மின்சாரத்தை பயன்படுத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சரவணன் (காங்கிரஸ்): கோத்தகிரி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீர்படுத்த வேண்டும்.

சிவகுமார் (தேமுதிக): பொது கிணற்றுக்கு போகும் பொது பாதையை காமராஜர் சதுக்கம் பகுதியில் தனியார்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் சை.வாப்பு பதில்: ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதோடு, ஏழை மக்களுக்கு பழக்கடை பகுதியில் கடை ஒதுக்கப்படும்.

டானிங்டன் பகுதி கழிப்பிடத்திற்கு உடனே தண்ணீர் வசதி ஏற்படுத்த சுகாதார ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மார்க்கெட் கோழி இறைச்சி கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புயல் நிவாரண மண்டப பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிடப்படும். தாமதிக்கும் பட்சத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு நபருக்கு கொடுக்கவும், அங்கு உபயோகிக்கப்பட்ட மின்சாரத்திற்கு ஒப்பந்ததாரரிடம் கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொது கிணறு உள்ள பாதையை ஆக்கிரமித்துள்ளதை ஆய்வு மேற்கொண்டு அது  மீட்கப்படும். குப்பைகள் இல்லா கோத்தகிரியாக மாற்ற நூறு சதவீதம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.