Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

Print PDF

தினகரன்             06.01.2014

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

சேலம், : சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், தொங்கும் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் முழுமை யாக செயல்பட துவங்கியது.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம், நூற்றாண்டு பழமை வாய்ந்த பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நிர்வாக திறன் அதிகரித்ததன் காரணமாக அலுவலக கட்டடங்களில் இட பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ7.68 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதி மூலம் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதையடுத்து பழைய மாநகராட்சி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணி துவங்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சியின் மேயர் அறை, ஆணையாளர் அறை, பொறியியல் பிரிவு, சிறப்பு திட்டப்பிரிவு, சுகாதாரப்பிரிவு, கணக்குபிரிவு, நிலஅளவை பிரிவு, கருவூலம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் தற்காலிக அலுவலகமான தொங்கும் பூங்கா கட்டடத்திற்கு இடமாற்றப்பட்டது.

தற்காலிக மாநகராட்சி மைய அலுவலகம் செயல்படுவதற்காக, தொங்கும் பூங்காவின் பழைய கட்டடங்கள் அனைத்தும் ரூ50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடங்களில் மேயர், ஆணையாளர் அலுவலகம், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது.

இனிமேல் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும், பொதுமக்கள் தொங்கும் பூங்கா அலுவலகத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே போல் செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் மேயரின் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாதாந்திர மாமன்ற கூட்டம் ஆகியவையும் இனி தொங்கும் பூங்கா அலுவலகத்தில் நடக்கவுள்ளது.