Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி            20.01.2014

உதகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உதகையிலுள்ள நகராட்சி மருந்தகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது, ஆட்சியர் பேசியதாவது:

இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்க நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதிற்குட்பட்ட 47,112 குழந்தைகளுக்கு தற்போது சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 106 துணை சுகாதார நிலையங்கள், 32 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 அரசு மருத்துவமனைகள், 49 தனியார் மருத்துவமனைகள், 283 குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்கள் ஆகியவற்றுடன் ரயில் நிலையங்கள், சுற்றுலா மையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் 30 நடமாடும் மருத்துவ மையங்களுடன், இதரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 259 முகாம்களுமாக மொத்தம் 770 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் 413 பேருடன், குழந்தைகள் ஊட்டச் சத்து மைய ஊழியர்கள் 665 பேரும், கல்லூரி மாணவர்கள் 272 பேரும், ரோட்டரி சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 55 பேருடன் இதர ஊழியர்கள் 1,687 பேருமாக மொத்தம் 3,080 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுப்பணித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, கல்வித் துறை, வேளாண்மை, மின்வாரியம், குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களின் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டாவது கட்ட போலியோ மருந்து முகாம் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறும் என்றார். மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநர் டாக்டர் பானுமதி, உதகை நகர்மன்றத் தலைவர் கே.சத்தியபாமா, நகர்மன்ற ஆணையர் சிவகுமார், பர்லியார் ஊராட்சித் தலைவர் எஸ்.கலைச்செல்வன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் உடனிருந்தனர்.