Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

Print PDF

தினமணி            24.01.2014 

வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

போடி நகராட்சியில், தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  போடி வட்டாட்சியர் அலுவலகத் தேர்தல் பிரிவு, போடி நகராட்சி ஆகியவை இணைந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன.  உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிவ. ஜானகி தலைமை வகித்து, பேரணியை தொடங்கிவைத்தார்.

  போடி வட்டாட்சியர் வீ. பழனிக்குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் ஆர். திருமலைவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில், போடி நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் வாக்காளர்களாக சேருவதன் அவசியம் பற்றியும், வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்களிப்பதன் மூலம் ஆற்றும் ஜனநாயகக் கடமைகள், வாக்காளர் அடையாள அட்டையின் பயன்கள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர்.

  பேரணியானது, போடி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, தேவர் சிலையில் நிறைவடைந்தது. இதில், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அசோகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.