Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல்.சசிகலா புஷ்பா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, துணை மேயர் சேவியர், மேயராக பொறுப்பு ஏற்றார்.

மேல்சபை வேட்பாளர்கள்

தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், மாநில மகளிர் அணி செயலாளருமான எல்.சசிகலா புஷ்பா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் டெல்லி மேல்சபை அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதற்கான கடிதத்தை மேயர் சசிகலா புஷ்பா, ஆணையாளர் மதுமதியிடம் கொடுத்தார். அதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் கஸ்தூரியிடம் கொடுத்தார்.

மாநகராட்சி கூட்டம்


இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் சேவியர் தலைமை தாங்கினார். அப்போது அவர், மேயர் அணியும் அங்கியை அணிந்து இருந்தார்.

கூட்டத்தில் துணை மேயர் சேவியர் பேசும்போது, “தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி அவர் தனது பதவியை ராஜினா செய்துள்ளார். இந்த தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பதிவுக்கும் பார்வைக்கும் வைக்கப்படுகிறது“ என்றார்.

தொடர்ந்து ஆணையாளர் மதுமதி பேசும்போது, “மேயர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், துணை மேயர் சேவியர், மேயர் பொறுப்பு வகிப்பார்“ என்றார்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்தது.

பஞ்சாயத்து கூட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக, துணை தலைவர் தெய்வேந்திரன் பொறுப்பு வகிக்கிறார்.

கூட்டத்தில் டெல்லி மேல் - சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னத்துரையும் கலந்து கொண்டார். அவர், தன்னை டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.