Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014

ஈரோடு மாநகராட்சியில் 5,675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்

ஈரோடு மாநகராட்சியில் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார்.

மிக்சி வழங்கும் விழா

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட 38, 39, 40 மற்றும் 42-வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சூரம்பட்டி ஜெகநாதபுரம் காலனி பகுதியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் வி.கே.சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் ரா.மனோகரன், காஞ்சனாபழனிச்சாமி, கேசவமூர்த்தி, முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆகியோர் பேசினார்கள். விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்குறுதிகள்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஒரு உறுதி அளித்தார். பெண்கள் கஷ்டப்படாமல் இருக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தருவேன் என்று கூறினார். அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார். ஆட்சியாளர்கள் பலரும் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் நிறைவேற்ற மாட்டார்கள்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2½ ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறார். அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 20 கிலோ விலையில்லா அரிசி கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் 60 வயது கடந்த முதியோர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கிறது. திருமண உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் கிடைக்கிறது. அவர் ஆட்சியில் இருப்பதால்தான் இப்போது மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கிடைக்கிறது.

புறக்கணிப்பு

மத்திய அரசு அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை புறக்கணிக்கிறது. அரிசி, மண்எண்ணை ஆகியவற்றை குறைவாக தருகிறது. பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் பெட்ரோல் -டீசல் விலையை அன்றாடம் உயர்த்தி வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைத்து உள்ளது. இந்த விலை உயர்வுகளுக்கு எல்லாம் காரணம் மத்திய அரசுதான். ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது. ஆனாலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் நிறைவேற்றி வருகிறார். அவருக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறினார்.

5,675 குடும்பங்கள்

மொத்தம் 5 ஆயிரத்து 675 குடும்பத்தினருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன.

விழாவில், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், வக்பு வாரிய உறுப்பினர் எஸ்.ஏ.பாரூக், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஈரோடு தாசில்தார் சாகுல் அமீது, துணை தாசில்தார் ஜெயக்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.