Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை மாநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

Print PDF

தினமணி          27.01.2014 

மதுரை மாநகரில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் ஆணையர் கிரண்குராலா முன்னிலையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 35 பணியாளர்களுக்கு சான்றுகளை வழங்கியும், பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, இசைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற 44 மாணவ, மாணவியருக்கும் மேயர் பரிசுகள் வழங்கினார்.

பின்னர், பசுமலை சப்-ஸ்டேஷன் பள்ளி, பொன்முடியார் பள்ளி, காக்கைப்பாடினியார் மேல்நிலைப் பள்ளி, வெள்ளிவீதியார் மேல்நிலைப் பள்ளி, மானகிரி ஆரம்பப் பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், துணைமேயர் ஆர். கோபாலகிருஷ்ணன், துணை ஆணையர் கோ. லீலா, மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து, நிலைக் குழுத் தலைவர்கள் சுகந்தி அசோக், முத்துக்கருப்பன், நகரப் பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் மு. ராக்கப்பன், நகர்நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர்கள் அ. தேவதாஸ், ரெகோபெயாம், சின்னம்மாள், பி.ஆர்.ஓ. சித்திரவேல் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் திரளாகக் கலந்து கொண்டனர்.

தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், உதவி ஆணையர் அ. தேவதாஸ் முன்னிலையில், மண்டலத் தலைவர் பெ. சாலைமுத்து தேசியக் கொடியேற்றினார். வேலைக்குழுத் தலைவர் கண்ணகி பாஸ்கரன், நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் மு. தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரி என்.சி.சி. மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

  விழாவில், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  இலுப்பைகுடியிலுள்ள இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை முகாமில், டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே. பட்டாரியா தேசியக் கொடி ஏற்றிவைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.

   ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், அதன் தாளாளர் ச. தாமஸ் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். டி. சுந்தரவேல் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

  ஏற்பாடுகளை, பள்ளித் தலைமை ஆசிரியை சு. ஜெயபாரதி, உடற்கல்வி ஆசிரியர் செல்லப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

  தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்ற விழாவில், சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். விழாவில், சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற விழாவில், சங்கத் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசினார். விழாவில், முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

  குட்ஷெப்பர்டு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் ச. தாமஸ் கிறிஸ்டோபர் தலைமையில், டி. சுந்தரவேல் தேசியக் கொடியேற்றினார். ஏற்பாடுகளை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜெ. வளர்மதி, உடற்கல்வி ஆசிரியை புஷ்பராணி ஆகியோர் செய்திருந்தனர்.

  வீரமாமுனிவர் வித்யாசாலை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளித் தாளாளர் ச. தாமஸ் கிறிஸ்டோபர் தலைமையில், டி. சுந்தரவேல் தேசியக் கொடியேற்றினார். ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியை தா. தெரசா கிறிஸ்டி பேர்லி, உடற்கல்வி ஆசிரியர் சசிக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

  செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், கல்லூரிச் செயலர் குருசாமி தேசியக் கொடியேற்றினார். முதல்வர் மீனா உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

  முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் சி. அமுதவல்லி தேசியக் கொடியேற்றினார்.

  மதுரை பழங்காநத்தம் ஆர்.சி. ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எப். சாயலீனூஸ் தலைமை வகித்தார். புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தையும், பள்ளித் தாளாளருமான பி. சிலுவை மைக்கேல் அடிகளார் தேசியக் கொடி ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

  ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை ஜாக்குலின் செபஸ்டி தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் பி.சிலுவை மைக்கேல் அடிகளார் தேசியக் கொடியேற்றி வைத்துப் பேசினார். விழாவில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் சேதுராமன் தேசிக் கொடியேற்றிவைத்துப் பேசினார். முதுநிலை மருத்துவ இயக்குநர் ராஜசேகரன், பொது மேலாளர் ஏடெல், அழகுமணி ஆகியோர் பேசினர். முன்னதாக, மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி வரவேற்றுப் பேசினார். விழாவில், மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.