Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

Print PDF

தினமணி          27.01.2014 

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

சுற்றுப்புறச் சூழல், சுகாதாரத்தில் முதன்மை மாநகரம் என்ற நிலையை அடைய மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று குடியரசு தினவிழாவில் மேயர் அ.விசாலாட்சி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

 திருப்பூர் மாநகராட்சியில், 65-ஆவது குடியரசு தினவிழா மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் எம்.ரவி வரவேற்றார்.

 இதில், தேசியக்கொடியேற்றி மேயர் அ.விசாலாட்சி பேசியது:

உலகம் வியந்து பார்க்கும் ஈடு இணையற்ற அரசியல் அமைப்புச் சட்டம் நம்முடையது. வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாடு இந்தியா.

  தமிழகத்தில்,  சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறச் சூழலின் நலன் காக்க முதல்வர் பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார்.  பொதுசுகாதாரத்தின் மீது தனி அக்கறை செலுத்தி வருகிறார் முதல்வர். இந்த ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ரூ. 170 கோடி செலவில் ஏற்கனவே மகளிருக்கான அடிப்படை சுகாதார வசதிகள் முதல்வரின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.   திருப்பூர் பகுதியில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலில் முதன்மையான மாநகரம் திருப்பூர் மாநகரம் என்ற நிலையை அடைய, மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார்.

  கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மாணவ, மாணவிகளுக்கு மேயர், துணை மேயர்

ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அதன்பின், மாணவ, மாணவியர் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் சென்று, குமரன் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இவ் விழாவில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், டெக்ஸ்வெல் முத்து, கவுன்சிலர்கள், எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் கருவம்பாளையம் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.