Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

Print PDF

தினமணி               15.02.2014

மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

மதுரை மாநகராட்சியிலுள்ள 10அம்மா உணவகங்களில் 4 உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளதாக, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

மதுரை மாநகராட்சியில் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட 10 அம்மா உணவகங்களில், கோ.புதூர், சந்தைப்பேட்டை புது ராமநாதபுரம் சாலை, திருப்பரங்குன்றம், மேலவாசல் ஆகிய 4 உணவகங்களுக்கும் உணவு தயாரிப்பு மற்றும் விநியோகிக்கும் முறைகளுக்காக, ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது. மற்ற உணவகங்களுக்கும் இந்தச் சான்று கிடைக்கும் வகையில் நிர்வகிக்கப்படும்.

இதேபோன்று, மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மாநகராட்சி நீச்சல் குளம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கும் ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக மதுரையிலுள்ள 4 அம்மா உணவகங்களுக்கு தரச் சான்று கிடைத்திருப்பது பெருமைக்குரியது.

மதுரையிலுள்ள 10  அம்மா உணவகங்களுக்கும் 31.1.2014 வரை ரூ.2.43 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது, ரூ.1-க்கு மலிவு விலையில் 1 கிலோ அரிசி வகையில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 400-ம், மளிகைச் சாமான்கள் ரூ.46 லட்சத்து 47 ஆயிரத்து 284-ம், எரிவாயு உருளை செலவு ரூ.46 லட்சத்து 47 ஆயிரத்து 169-ம், காய்கறிகள் ரூ.71 லட்சத்து 57 ஆயிரத்து 500-ம், ஊறுகாய் ரூ.27 லட்சத்து 60 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சியில், வார்டு வாரியாக ரூ.12 கோடியில் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. இப் பணிகளில் 95 சதவீத பணிகள் 15 நாள்களுக்குள் துவங்கி விரைவில் முடிக்கப்படும். ஏற்கனவே, ரூ.1.75 கோடியில் கட்டப்பட்டு வரும் மண்டலம் 2-க்கான அலுவலகக் கட்டடம், சப்பாணி கோவில் தெரு மருந்தகம் மற்றும் அன்சாரி நகர் நலவாழ்வு மையம், யானைக்கல் சந்திப்பில் விரைவு மக்கள் குறை தீர்க்கும் மையம், அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கான அலுவலகக் கட்டடம் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றார்.

  பேட்டியின்போது, எம்எல்ஏ கருப்பையா,  நகர்நல அலுவலர் யசோதாமணி, நகரமைப்பு அலுவலர் மு.ராக்கப்பன், உதவி ஆணையாளர்கள் அ.தேவதாஸ், ரெகோபெயாம், சின்னம்மாள், பிஆர்ஓ சித்திரவேல், செயற்பொறியாளர்கள் திருஞானம், சந்திரசேகரன், அரசு, ராஜேந்திரன், வரிவிதிப்புக் குழுத் தலைவர் ஜெயபால் ஆகியோர் உடனிருந்தனர்.