Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம்

Print PDF

தினமணி            17.02.2014

மாநகராட்சி மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் செ.ம.வேலுசாமி பேசியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகத்தில் முதன்முறையாக இலவச  எண்டோஸ்கோப்பி பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம், இனி ஒவ்வொரு சனிக்கிழண்யும் ஒரு மண்டலத்தில் தொடர்நது நடத்தப்படும்.

எல்.சி எண்டோஸ்கோப்பி மையத்துடன் மாநகராட்சி இணைந்து இம் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மூலம் எண்டோஸ்கோப்பி   பரிசோதனை இயந்திரம் வாங்கப்படவுள்ளது.

குடலில் தொந்தரவு உள்ளவர்கள் அதிக நாள் காத்திருக்காமல் விரைவாக எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்துகொண்டு மருத்துவம் பார்த்துக்கொண்டால் விரைவாக நோய் குணமடையும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, வரும் 22-இல் மாநகராட்சி சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கான இலவச ரத்தப் பரிசோதனை முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெறும். இம் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மையமும், ராமலிங்கம் காலனி மாநகராட்சி மருத்துவமனையில் ஆயுர்வேத எலும்பு சிகிச்சை மையமும் தொடங்கி வைக்கப்படும்.

வரும் 22-இல் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தல், மாநகரப் பகுதியில் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க பயிற்சியளித்தல், சிறப்பாக பணியாற்றும்  குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கு பரிசு வழங்குதல், 6 முதல் 8 வகுப்புகளில் பயிலும் மாநகராட்சிப் பள்ளி குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி நடத்துதல், மாநகராட்சி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி நடத்துதல், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கோலப் போட்டி நடத்துதல், பிளாஸ்டிக் சேகரிப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

வரும் 24-இல் மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து      குழந்தைகளுக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்படும். மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளில் பிப். 24-இல் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் அகராதி பரிசாக வழங்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.

இதில் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட 140 பேருக்கு இலவச எண்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.ராஜு, மத்திய மண்டலத் தலைவர் கே.ஏ.ஆதிநாராயணன், சுகாதார அலுவலர் பி.அருணா, கல்வி அலுவலர் வசந்தா, உதவி ஆணையர்கள் சுப்ரமணியன், அமுல்ராஜ், பிரபாகரன், ரவி, சுந்தர்ராஜ், சரவணன், சுகாதாரக் குழுத் தலைவர் தாமரைச்செல்வி,

நிதிக் குழுத் தலைவர் பிரபாகரன், பணிக்குழு தலைவர் அம்மன் அர்ச்சுனன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், எஸ்.மணிமேகலை, அன்னம்மாள், வெள்ளியங்கிரி, ஜோதிமணி, எஸ்.பாலன், எல்.சி. எண்டோஸ்கோப்பி மைய மருத்துவர்கள் வித்யா ராஜன், கந்தசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் வேலுமணி, ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.