Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

Print PDF

தினமணி            17.02.2014

சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள்: நாளை தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 இடங்களில் சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை (பிப். 17) முதல் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பிப். 17, 18 மற்றும் 20-ம் தேதிகளில் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் 660 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் தாய்சேய் நலம் மற்றும் குழந்தைகள் நலம் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வர உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 9 வட்டாரங்கள் மற்றும் 4 நகராட்சிகளிலும் 15 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி நாகர்கோவில் நகராட்சியில், மறவன்குடியிருப்பு செயின்ட் மேரி தொடக்கப் பள்ளி, கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப் பள்ளி, ஒழுகின சேரி என்.எஸ்.கே. அரசு உயர் நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

பத்மநாபபுரம் நகராட்சியில்,  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், குழித்துறை நகராட்சியில் மாடவிலாசம் அரசு நடுநிலைப் பள்ளியிலும், குளச்சல் நகராட்சியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற உள்ளன.

குருந்தன்கோடு வட்டாரத்தில் கடியப்பட்டணம் ஸ்கேர்டு ஹார்ட் உயர்நிலைப் பள்ளியிலும், மேல்புறம் வட்டாரத்தில் அண்டுகோடு பி.பி.எம் மேல்நிலைப் பள்ளியிலும், ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் தர்மபுரம் எல்.எம்.எஸ். நடுநிலைப் பள்ளியிலும், அகஸ்தீசுவரம் வட்டாரத்தில்  கன்னியாகுமரி புனித ஜோசப் தொடக்கப் பள்ளியிலும், கிள்ளியூர் வட்டாரத்தில் பள்ளியாடி புனித வியானி மேல்நிலைப் பள்ளியிலும், தோவாளை வட்டாரத்தில்  தோவாளை வடக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், தக்கலை வட்டாரத்தில் திருவிதாங்கோடு மலையாளப் பள்ளியிலும், முன்சிறை வட்டாரத்தில் மங்காடு அரசு நடுநிலைப் பள்ளியிலும், திருவட்டாறு வட்டாரத்தில் வியன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 வரை நடைபெறுகின்றன.

இந்த முகாம்களில் கர்ப்பிணி களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல், ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

சிறப்பு கவனம் தேவைப்படும் பெண்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்குப் பரிந்துரைத்தல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி

உதவி திட்டத்தில் பதிவு செய்தல், 5 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.