Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகங்களில் 21–ந்தேதி முதல் சப்பாத்தி விற்பனை: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

Print PDF

மாலை மலர்              18.02.2014

அம்மா உணவகங்களில் 21–ந்தேதி முதல் சப்பாத்தி விற்பனை: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்
 
அம்மா உணவகங்களில் 21–ந்தேதி முதல் சப்பாத்தி விற்பனை: ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.18 - ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் கடந்த ஆண்டு ‘அம்மா உணவகம்’ திறக்கப்பட்டன.

200 வார்டுகளிலும் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

காலை மற்றும் மதியம் உணவு மிக குறைந்த விலையில் வழங்கப்படுவதால் சாதாரண மக்களின் அன்றாட செலவு குறைந்தது. இட்லி ஒரு ரூபாயும், சாமபார், கருவேப்பிலை, எலுமிச்சை சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு வழங்கப்படுவதால் அம்மா உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. உணவு பொருட்கள் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

சென்னையில் இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளிலும் விரிவு படுத்தப்பட்டது.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 6000 சதுர அடியில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அம்மா உணவகம் இதுவேயாகும்.

ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள், ஆட்டோ டிரைவர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகளவு இந்த உணவகத்தை பயன்படுத்துகிறார்கள்.

அம்மா உணவகத்துக்கு பொதுமக்களின் ஆதரவு பெருகியதால் சென்னையில் மாலை நேரத்தில் சப்பாத்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விசேஷ சப்பாத்தி தயார் செய்யும் எந்திரம் 15 கொள்முதல் செய்யப்பட்டன.

இந்த நவீன எந்திரம் மூலம் 201 அம்மா உணவகங்களில் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் சப்பாத்தி தயாரித்து விற்க கடந்த சில மாதங்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பரீட்சார்த்த முறையில் சப்பாத்தி தயாரித்தபோது அதில் சில குறைகள் ஏற்பட்டதால் சப்பாத்தி விற்பனை தொடங்குவது தள்ளிப்போனது.

தற்போது 15 மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு சப்பாத்தி எந்திரம் வீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து சப்பாத்தி தயாரிக்கப்பட்டு அனைத்து வார்டுகளில் உள்ள அம்மா உணவகத்திற்கும் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 4 லட்சம் சப்பாத்திகள் தயாரித்து ஒவ்வொரு உணவகத்திலும் தலா 2000 சப்பாத்தி வீதம் வழங்கப்பட உள்ளன.

சென்னையில் உள்ள 201 அம்மா உணவகத்திலும் சப்பாத்தி விற்பனை செய்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. முதல்–அமைச்சர் ஜெயலலிதா சப்பாத்தி விற்பனையை 21–ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல் 12–45 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து 201 அம்மா உணவகத்திலும் சப்பாத்தி விற்பனை தொடங்குகிறது.

ஒரு சப்பாத்தியின் விலை ரூ.3 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சப்பாத்திக்கு பருப்பு கடைசல் வழங்கப்பட உள்ளது. சப்பாத்தி விற்பனை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தினமும் 2 லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள். சப்பாத்தி அறிமுகம் செய்துவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள், உணவு கட்டுப்பாடு மேற்கொள்ளக் கூடியவர்கள் சப்பாத்தியை விரும்பி சாப்பாடுவார்கள். எனவே முதல்வரின் இந்த திட்டம் பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக அமைகிறது.