Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சிகளில் காலி இடங்களுக்கு தேர்தல்; மாநில தேர்தல் கமிஷன் 'அலர்ட்'

Print PDF

தினமலர்      19.08.2014

உள்ளாட்சிகளில் காலி இடங்களுக்கு தேர்தல்; மாநில தேர்தல் கமிஷன் 'அலர்ட்'

கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவியிடங்களை இடைத்தேர்தல் நடத்தி நிரப்ப, தேர்தல் பணிகளை, மாநில தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்களும் காலியாகவுள்ளன. காலி பதவியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த 5ம் தேதி, மாநில தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால், அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்தன.இதையடுத்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், மாநில அரசுடன் ஆலோசனை செய்து, இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தனர். மேலும், மே மாதம் 27 ம் தேதி, கோவை மாநகராட்சி மேயர் பதவியிடம் காலியானதாலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடையாததாலும், கோவை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பு செய்யவில்லை.

கோவை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தேர்த்ல கமிஷன் உத்தரவிட்டது. கடந்த லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கோவை மாநகரட்சிக்கான வாக்காளர் பட்டியல் கடந்த, 14ம் தேதி வெளியிடப்பட்டது.உள்ளாட்சிகளில் காலி பதவியிடங்களை நிரப்புவதற்கான, இடைத்தேர்தல் குறித்து, மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம், மாநில தேர்தல் கமிஷன் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தியது.

மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் உள்ள வீடியோ கான்பரன்ஸ் அறையில், நேற்று காலை மற்றும் மதியம் என, இரண்டு கட்டமாக உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தவது குறித்தும், தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி அமைப்பது, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் படுத்துவது, பூத் சிலிப் அச்சிடுவது, ஓட்டுப்பதிவுக்கான உபகரணங்களை தயார் செய்வது போன்ற பணிகளை மாநில தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் கமிஷனும் பணிகளை வேகப்படுத்தி, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளை 'அலர்ட்' செய்துள்ளதால், உள்ளாட்சிகளில் காலி பதவியிடங்களை நிரப்புவதற்கான, இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும், வெளியாகலாம், என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி., தேர்தலுக்கு சமம்!
கோவை மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ''கோவை மாநகராட்சியில், கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தலின் போது, 10 லட்சத்து 45 ஆயிரத்து 356 வாக்காளர்கள் இருந்தனர்; 1,101 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மாநகராட்சிக்கு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 தேர்தலுடன் ஒப்பிடும் போது, இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 296 வாக்காளர்கள் அதிகரித்து, மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் 1,600 பேருக்கு மேல் இருந்தால், அந்த ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், 127 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து, 1,228 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கோவை மாநகராட்சியில், கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவை மேயருக்கு தேர்தல் நடத்துவது, எம்.பி., தேர்தலுக்கு சமம்,'' என்றார்.