Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சாவூர், திண்டுக்கல்லை எழில்மிகு மாநகராட்சிகளாக்க தமிழக அரசு நடவடிக்கை

Print PDF

தினமணி       26.08.2014 

தஞ்சாவூர், திண்டுக்கல்லை எழில்மிகு மாநகராட்சிகளாக்க தமிழக அரசு நடவடிக்கை 

தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளை எழில்மிகு மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மக்கள்தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழக அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது.

இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று, திண்டுக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தை புனரமைப்பு செய்யவும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத்தில் உள்ள வழியோர கிராமங்களுக்கு தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரை பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

இதேபோன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப்படும்.

2. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

3. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

4. திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

6. சாலைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

7. திறந்ததவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47