Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி     09.09.2014

உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் 14 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், நகர்மன்றத் தலைவர், ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட 14 பேர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், நகர்மன்றம், பேரூராட்சி உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட காலியாக உள்ள 97 பதவிகளுக்கு செப். 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திங்கள்கிழமை வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாகும். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வாபஸ் பெற்றதையடுத்து அதிமுக வேட்பாளர் இ. புவனேஷ்வரி மேயராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து, அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு சங்கரன்கோவிலில் 4 மற்றும் 30 ஆவது வார்டு, புளியங்குடியில் 17 ஆவது வார்டு, கடையநல்லூரில் 24 ஆவது வார்டு, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு பத்தமடையில் 2 ஆவது வார்டு, ராயகிரியில் 2 ஆவது வார்டு, பணகுடியில் 3 ஆவது வார்டு, சுந்தரபாண்டியபுரத்தில் 13 ஆவது வார்டு, மூலக்கரைப்பட்டியில் 11 ஆவது வார்டு, நான்குனேரியில் 6 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாளையங்கோட்டை ஒன்றியம், மேலத்திடியூர் ஊராட்சித் தலைவர் கே. சங்கரகோமதி, சேரன்மகாதேவி ஒன்றியம், மூலச்சி ஊராட்சித் தலைவர் செ. குருநாதன் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் நடைபெறும் இடங்கள்: சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சித் தலைவர், தென்காசி நகராட்சி 14 ஆவது வார்டு, கடையநல்லூர் நகராட்சி 19 ஆவது வார்டு, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 20 ஆவது வார்டு உறுப்பினர், திருக்குறுங்குடி பேரூராட்சி 3 ஆவது வார்டு, மேலகரத்தில் 5 ஆவது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இம் மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.