Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

Print PDF

தினமணி           10.09.2014

உள்ளாட்சி இடைத் தேர்தல்: நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு

உள்ளாட்சி இடைத் தேர்தலில் நகர்ப்புற அமைப்புகளில் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 போட்டியிட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 4-ஆம் தேதியுடனும், மனுக்களைத் திரும்பப் பெற கடந்த 8-ஆம் தேதியும் கடைசி நாள்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ஜோதி நிர்மலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் மூன்று மாநகராட்சி மேயர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளர் இ. புவனேஸ்வரி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மேலும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 4 உறுப்பினர்கள் போட்டியின்றியும், மீதமுள்ள 8 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது.

நகராட்சிகளில் காலியாகவுள்ள எட்டு தலைவர் பதவியிடங்களில் நான்கு இடங்களுக்கு போட்டியின்றியும், மீதமுள்ள இடங்களுக்கு தேர்தலும் நடத்தப்படவுள்ளது.

நகராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களில் 30 பேர் போட்டியின்றியும், 23 இடங்களுக்கு தேர்தலும் நடைபெறுகிறது. ஏழு பேரூராட்சித் தலைவர் பதவியிடங்களில் ஒரு இடத்துக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஆறு இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்.

பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 64 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 39 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும். மூன்று பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு வேட்பு மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை.

ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 25 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேரும், சிற்றூராட்சித் தலைவர் பதவிக்கு 270 பேரும், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 775 பேரும் என மொத்தம் நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஆயிரத்து 486 பேர் போட்டியிட உள்ளனர் என்று தேர்தல் ஆணைய செயலாளர் ஜோதி நிர்மலா தெரிவித்துள்ளார்.

மொத்தம் 104 பேர் தேர்வு: நகர்ப்புற உள்ளாட்சிகளில் மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகர மேயர் ஒருவரும், மாநகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் 4 பேரும், நகராட்சித் தலைவர் 4 பேரும், வார்டு உறுப்பினர்கள் 30 பேரும், பேரூராட்சி தலைவர் ஒருவரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 64 பேரும் என மொத்தம் 104 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதன்பின் செப்டம்பர் 22-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.