Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி        12.09.2014  

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த ஆந்திரம், தில்லி மாநகராட்சி அதிகாரிகள் 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்து, அங்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசி பார்த்த ஆந்திர மாநிலம் அனந்தப்பூர், தெற்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள்.

ஆந்திர மாநிலம், தில்லி மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாநகராட்சி ஆணையர் ஜே.ஸ்ரீனிவாசலு, துணை செயற்பொறியாளர் எஸ்.சதீஷ் சந்தர் உள்ளிட்ட குழுவினர், தெற்கு தில்லி மாநகராட்சி பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் யோகேந்திரபாபு, துணை கணக்குக் கட்டுப்பாட்டாளர் எஸ்.பி.பிள்ளை, செயற்பொறியாளர் அஜய் அகர்வால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர்.

உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர்கள், அங்கு பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பணியாளர் தேர்ந்தெடுக்கப்படும் முறை, பணி நேரம் உள்ளிட்டவை குறித்துக் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து, உணவகத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் கூறுகையில், அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் உள்ளன.

ஆந்திரத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளில் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன.

தில்லி மாநகராட்சியிலும் இதே போன்று மலிவு விலை உணவகங்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.