Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள்; 300 போலீசார் கண்காணிப்பு

Print PDF

மாலை மலர் 4.11.2009

மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடினால் கைது செய்யப்படுவார்கள்; 300 போலீசார் கண்காணிப்பு

சென்னை, நவ. 4-

சென்னை மெரீனா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும். 300போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஆசியாவிலேயே மிக நீளமான கடற்கரை என்ற பெருமையை பெற்றுள்ள மெரீனா. தற்போது புதுபொழிவு பெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் முடிந்து இன்னும் சில தினங்களில் பொதுமக்கள் பார்வைக்கு முறைப்படி திறந்து வைக்கப்பட உள்ளது.

மெரீனா கடற்கரையில் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட, நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 14இடங்களில் சிறிய பூங்காக்களும் அங்கு பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

நடைபாதையிலும் பூங்காக்களிலும் 3கோடியே 89லட்சம் செலவில் 700-க்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைகள் அனைத்தும் மெரீனா சர்வீஸ் சாலையில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்களால் சீர்குலைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மின்விளக்குகள் பளிங்குகற்கள் உடைக்கப்படுவதாகவும், சாலைகள் சேதப்படுத்தப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக மெரீனாவில் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கபடுவதாக போலீஸ்கமிஷனர் ராஜேந்திரன் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடும் நபர்களை விரட்டி அடிக்கவும், கைது செய்யவும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

மெரீனா சர்வீஸ் சாலையில் குழிதோண்டி கம்புகளை நட்டு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சாலை சேதமாகிறது. இங்குள்ள மின்விளக்குகளை பந்துகொண்டு அடித்தும் கற்களால் எறிந்தும் சேதப்படுத்துகிறார்கள்.

சாலையில் டூவீலர்களிலும், கார்களிலும் யாரும் செல்லமுடிவதில்லை. வாக்கிங் செல்லும் முதியவர்கள் மீது பந்து பட்டு காயம் ஏற்படுகிறது. மெரீனாவில் அழகை கெடுக்கும் வகையில் செயல் படுகிறார்கள்.

எனவே அவர்கள் மீண்டும் இங்கு கிரிக்கெட் விளையாட அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீறி கிரிக்கெட் விளையாடினால் வாலிபர்களை விரட்டி அடிப்போம். கேட்க மறுத்தால் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்வோம்.

இங்கு கிரிக்கெட் விளையாட வரும் பெரும்பாலான வாலிபர்கள் அம்பத்தூர், செங்குன்றம் மண்ணடி பகுதியில் இருந்து வருகின்றனர். அவர்களுக்குள்ளோ சண்டையும் போட்டுக் கொள்வதால் வீணான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் கிரிக்கெட் விளையாடாமல் தடுக்க சுழற்ச்சி முறையில் 300போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மெரீனா கடற்கரை பாதுகாப்பு பணிக்கு மாநகராட்சிக்கு தனியார் செக்கி யூரிட்டிகளையும் நியமிக்க முடிவு செய்துள்ளது. தினமும் காலை முதல் இரவு 10மணி வரை 2ஷிப்டுகளில் செக்கியூரிட்டிகள் பணிபுரியும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டுக்கு 7பேர் வீதம் 14பேர் பணிக்கு அமர்த்தப்படுவர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 3கிலோமீட்டர் தூரத்திற்கு இவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

இதற்காக திடகாத்திரமான உடல்பாகு கொண்ட 45வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் செக்யூரிட்டிகளாக நியமிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் மாநகராட்சி நிபந்தனை விதித்துள்ளது

Last Updated on Wednesday, 04 November 2009 11:50