Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்காக 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு

Print PDF

தினமணி 09.11.2009

வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்காக 19 சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை குளோரின் மாத்திரைகளை வழங்கிய மேயர் மா. சுப்பிரமணியன். உடன் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி

சென்னை, நவ.8: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 19 சமையல் கூடங்களில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது என்று மேயர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கோபாலபுரம் மாநகராட்சி நிவாரண மையத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தயாரிக்கப்படும் உணவை, மேயர் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை (நவ. 8) ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மூலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலை, கோபாலபுரம், சிந்தாதரிப்பேட்டை, பேசின் பாலம் ஆகிய 4 இடங்களில் நிரந்தர நிவாரண சமையல் கூடங்கள் உள்பட 19 இடங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

சென்னையில் சனிக்கிழமை 60 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், 15 ஆயிரம் ரொட்டிகளும் வழங்கப்பட்டன. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை காலையில் 46 ஆயிரம் உணவுப் பொட்டலங்களும், 10 ஆயிரம் ரொட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேவைப்படும் மற்ற இடங்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்குப் பருவ மழை காரணமாக சென்னையில் கடந்த நான்கு நாட்களாக 43 செ.மீ. மழை பெய்தது. கடந்த ஆண்டுகளில் பருவ மழையின் போது பல பகுதிகளில் 6 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கி நின்றது.

ஆனால், இப்போது கால்வாய்கள் தூர்வாரியது, புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைத்தது உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுகள் மூலம் தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலை, வேளச்சேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் நிற்காமல் சென்றுள்ளது என்றார் மேயர்.

Last Updated on Monday, 09 November 2009 09:42