Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சுவரொட்டிகள் அகற்றம

Print PDF

தினமணி 12.11.2009

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் சுவரொட்டிகள் அகற்றம

சென்னை, நவ. 11: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள், புதன்கிழமை அகற்றப்பட்டன.மாநகராட்சிக்கு சொந்தமான 3,464 கட்டடங்களில் நவம்பர் 11-ம் தேதி முதல் சுவரொட்டிகள் ஒட்டவும், விளம்பரங்களை எழுதவும் தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதன்படி, ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணியை, மாநகராட்சி ஊழியர்கள் புதன்கிழமை மேற்கொண்டனர்.'

இப்பணியை பார்வையிட்ட மேயர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:'

மாநகராட்சி விளையாட்டு மைதானங்கள், கழிப்பிடங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், சுகாதார மையங்கள் உள்பட சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 3,464 கட்டடங்களின் சுற்றுச்சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கும், விளம்பரங்கள் எழுதுவதற்கும் புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் ஏற்கெனவே 10,700 சதுர அடி அளவுக்கு தமிழர் பண்பாட்டை விளக்கும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் 42 ஆயிரம் சதுர அடி சித்திரம் வரையப்பட உள்ளது.

தீவுத்திடலில் பொருள்காட்சிகள் நடைபெறும் மைதான சுற்றுச்சுவரில் 30 ஆயிரம் சதுர அடி அளவில் சித்திரம் வரையப்பட்டுள்ளது. கதீட்ரல் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை சுற்றுச் சுவர் ஆகியப் பகுதிகளிலும் சித்திரங்கள் வரையப்பட உள்ளன.

தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சாலைகள் முதலில் செங்கல் படிமானங்கள் கொண்டு சரி செய்யப்படும். பின்னர் போர்க்கால அடிப்படையில் தார்க் கலவை கொண்டு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்படும்.

நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் லிஃப்ட் வசதியுடன் கட்டப்பட்டுள்ள நடை மேம்பாலம், 10 நாள்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்படும் என்றார் மேயர்.