Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

Print PDF

தினமணி 18.11.2009

வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

பெரம்பலூர், நவ. 17: பெரம்பலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும், அண்மையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மா. ராஜ்குமார் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், பெரம்பலூர் - வடக்குமாதவி சாலையை பார்வையிட்டு, ஆய்வு செய்த ராஜ்குமார், இந்த சாலை மழையால் பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளதால் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.

மேலும், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தையும், தொலைபேசி கம்பத்தையும் அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார் ராஜ்குமார்.

பின்னர், பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பிடத்தை பார்வையிட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும், கட்டணம் பெறுவதற்கான விவரப்பட்டியல் வைக்க வேண்டும் என நகராட்சி சுகாதாரா ஆய்வாளர் முருகனுக்கு உத்தரவிட்டார். விளாமுத்தூர் சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் வகையில், அப்பகுதியில் அமையவுள்ள ரவுண்டானா பகுதியில் உள்ள மரத்தை அகற்றி விரைவில் பூங்கா அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றார்.

மேலும், பெரம்பலூர் நகராட்சியில் செயல்படுத்தபட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்காமல் தாமதப்படுத்தி வரும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ராஜ்குமார்.

இந்த ஆய்வின் போது, நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா, நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் மாயவேல், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்

Last Updated on Wednesday, 18 November 2009 08:41