Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டணக் கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து

Print PDF

தினமணி 20.11.2009

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டணக் கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து

வேலூர், நவ. 19: வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிவறைகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று மேயர் ப.கார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டண கழிவறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு அறிவுறுத்தியுள்ளது. ரூ. 1 தான் வசூலிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படும். அதையும் மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

ஏற்கெனவே இந்த 6 கழிவறைகளை மாநகராட்சி பராமரித்தபோது தினசரி ரூ. 4,260 தான் மாநகராட்சிக்குச் செலுத்தி வந்தனர். தற்போது ஒப்பந்தத்தின் மூலம் மாநகராட்சிக்கு தினசரி ரூ. 14,800 கிடைக்கிறது. பஸ் நிலையத்தில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்த விவரப் பலகைகள் ரூ. 22 ஆயிரம் செலவில் வைக்கப்பட்டுள்ளன.

பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. அவர்கள் மாற்று இடம் கேட்டு வருகின்றனர். ஆணையருடன் சென்று பார்வையிட்டு, மாற்று இடம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

பழைய பஸ் நிலையத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் முறையாக வெண்கலத்தில் திருவள்ளுவர் சிலை விரைவில் நிறுவப்படும் என்றார் கார்த்திகேயன்.