Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சிக்கு 2010 பிப்.21-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Print PDF

தினமணி 08.12.2009

பெங்களூர் மாநகராட்சிக்கு 2010 பிப்.21-ல் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


பெங்களூர், டிச.7: பெருநகர பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.

பல்வேறு காரணங்களால் பெங்களூர் மாநகராட்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் டிசம்பர் 7-ம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தது மாநில தேர்தல் ஆணையம்.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி சி.ஆர்.சிக்மத் நிருபர்களுக்கு திங்கள்கிழமை மாலை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பெருநகர பெங்களூர் மாநகராட்சியின் 198 வார்டுகளுக்கும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பான அறிவிக்கை பிப்ரவரி 1-ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று முதலே தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

வேட்புமனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 8-ம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் அடுத்த நாளே பரிசீலனை செய்யப்படும். போட்டியிலிருந்து விலக விரும்புவோர் வேட்புமனுக்களை வாபஸ்பெற 11-ம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து 21-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 25-ம் தேதி எண்ணப்படுகின்றன.

மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் 66 லட்சத்து 19,704 வாக்காளர்கள் உள்ளனர். இவற்றில் 34 லட்சத்து 82,698 பேர் ஆண் வாக்காளர்கள், 31 லட்சத்து 37,006 பேர் பெண் வாக்காளர்கள்.

மொத்தம் 198 வார்டுகளில் 6,590 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 7,260 தேர்தல் அதிகாரிகளும், 21,773 வாக்குச் சாவடி ஊழியர்களும் பணியில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 25-ம் தேதி வரை அமலில் இருக்கும். தேர்தல் வாக்குப் பதிவுக்கு மொத்தம் 15,500 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 9500 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் பிரெய்லி முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளதால் பார்வையற்றோர் சுலபமாக வாக்களிக்க முடியும்.

தேர்தல் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஜ்ஜ்ஜ்.க்ஷக்ஷம்ல்ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ண்ய்ச்ர் என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. எந்தெந்த வார்டுகள் பொதுவார்டுகள், இடஒதுக்கீடு வார்டுகள், பெண்களுக்கான வார்டுகள் எவை, தங்கள் பகுதியில் வாக்குச்சாவடி மையம் எங்கு உள்ளது, வாக்காளர் பட்டியலில் தனது பெயர் உள்ளதா? என்பதை குறிப்பிட்ட இணையதளத்தில் வாக்காளர்கள் பார்க்கலாம்.

இவை தேர்தல் ஆணையத்தின் ஆரம்ப கட்டப் பணிகளாகும். தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் பிறகு செய்யப்படும் என்றார்.

Last Updated on Tuesday, 08 December 2009 05:58