Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Print PDF

தினமலர் 23.12.2009

கடையநல்லூர் நகராட்சியில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

கடையநல்லூர்:கடையநல்லூரில் வேகமாக பரவி வரும் மர்மகாய்ச்சலையடுத்து நகராட்சி சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி தலைவர் இப்ராகிம் தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகியோரது ஏற்பாட்டின்படி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மைக்குழு உறுப்பினர் சைபுல்லா, முகமது புகாரி, முகமது காசிம், சமூகநல இயக்க நிறுவர் ஜபருல்லா, தலைவர் உகலா சுந்தர், பொது செயலாளர் சீனா மசூது, விஸ்வா சுல்தான் மற்றும் பொது நல அமைப்பினர் கலந்து கொண்டனர்.சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் குமார், சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் அய்யப்பன், நகராட்சி இஞ்சினியர் அய்யனார், கடையநல்லூர் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், கைலாசம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளக்கூடிய காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கொசு மருந்து, அபேட் மருந்துகள் தெளித்திட சுகாதாரத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் இப்ராகிம் கூறுகையில்: - கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணாபுரத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதை போல மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், பேட்டை பகுதிகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் மூலமாக பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய அறிவிப்புகள் குறித்து ஒவ்வொரு பகுதிக்கும் நோட்டீஸ் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த நோட்டீஸ்கள் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல் குறித்து என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் சைபுல்லா காஜா கூறுகையில்,கடையநல்லூரில் இருந்து காய்ச்சல் பாதித்து நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் சிகிச்சைக்காக சென்றபோது மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையின் அடிப்படையில் அது மர்ம காய்ச்சல் தான் என்பதும், டெங்கு காய்ச்சல்தான் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த காய்ச்சல் பாதித்த நோயாளிகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் உள்ள நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ரத்தம் வழங்கி வருகின்றனர்.4 யூனிட் ரத்தம் வரை ஒவ்வொரு வரும் வழங்கியுள்ளனர். எனவே டெங்கு காய்ச்சலுக்குரிய மருத்துவ முறையினை மேற்கொண்டு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.