Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாளை. வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஜூனில் போக்குவரத்து

Print PDF

தினமணி 29.12.2009

பாளை. வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் ஜூனில் போக்குவரத்து

திருநெல்வேலி, டிச. 28: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் பணிகள் ஜூன் மாதம் நிறைவு பெற்று, போக்குவரத்து தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இம் மாநகரில் போக்குவரத்து நெரிசல், தீராத பிரச்னையாக இருந்து வருகிறது. இரட்டை நகரங்களான திருநெல்வேலி, பாளையங்கோட்டைக்கு இடையே இருக்கும் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானாவில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ரவுண்டானாவை கடந்து செல்ல வெகுநேரம் ஆகிறது.

இப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலன் இல்லாததால், அங்கு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

புதிய மேம்பாலம் மதுரை-நாகர்கோவில் சாலையில் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஒப்பந்தப் புள்ளியை மதுரையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் எடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் பணியைத் தொடங்கியது. ரூ. 13.68 கோடியில் கட்டப்படும் இந்த மேம்பாலப் பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர்.

மேம்பாலப் பணியின் தொடக்கமாக அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து அங்கு போக்குவரத்தை மாற்றி விடுவதற்காக, இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

பின்னர் தூண்கள் அமைப்பதற்காக, துளைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துளைகளும் சுமார் 27 அடி ஆழத்தில் போடப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்டன. பாலத்தின் மத்திய பகுதியில் இருக்கும் செல்லப்பாண்டியன் ரவுண்டானா பகுதியில், மார்ச் மாதம் எட்டரை மீட்டர் உயரத்தில் தூண் அமைக்கப்படுகிறது.

இப் பாலம் மொத்தம் 600 மீட்டர் நீளத்தில், 17.2 மீட்டர் அகலத்தில், 20 தூண்களோடு அமைகிறது. பாலத்தின் மேல்தளம் மட்டும் 250 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படும். இப்போது பாலத்தின் 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

பாலத்தின் முக்கிய பணியான, மேற்தளம் அமைக்கும் பணி இரு வாரங்களாக வேகமாக நடைபெறுகிறது. இந்த பணியில் சுமார் 150 தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபடுகின்றனர். இப் பணி மே மாதம் வரை நடைபெறும். அதேவேளையில் செல்லப்பாண்டியன் சிலை இருக்கும் பகுதியில் பெரிய தூண் அமைப்பதில் சிரமம் ஏற்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். பாலத்தின் அனைத்துப் பணிகளையும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் முடித்து, போக்குவரத்தை ஜூன் மாதத்துக்குள் திறந்துவிட திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

2009 ஏப்ரலில் தொடங்கிய பாலப் பணியை, 2011 ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், 10 மாதங்களுக்கு முன்பே பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலத்துக்காக நிலம் வாங்கும் பணி காலதாமதம் இல்லாமலும், பாலப் பணிகள் தொய்வு இல்லாமலும் நடைபெறுவதால் திட்டமிட்ட காலத்துக்கு முன்பே பணிகள் நிறைவடையும். இப் பாலம் பணி நிறைவடைந்ததும், குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 29 December 2009 06:48