Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அறந்தாங்கி நகராட்சி கூட்டம்

Print PDF

தினமலர் 31.12.2009

அறந்தாங்கி நகராட்சி கூட்டம்

அறந்தாங்கி : அறந்தாங்கியில் நகராட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். பொறியாளர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதமாவது :

கவுன்சிலர் முத்து சுப்ரமணியன்: அறந்தாங்கி வாரச்சந்தையை விரைவில் நம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

சேர்மன்: இது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

விஆர்எஸ் சுப்ரமணியன்: தமிழ்நாட்டில் மஞ்சள்காமாலை,போலியோ என பல நோய்களுக்கு நோய்தடுப்பு ஊசிகள் போடும்போது தற்போது தமிழ்நாட்டில் உள்ள காய்ச்சலுக்கு தடுப்பூசி போடப்படுமா.

சேர்மன்: நீங்கள் குறிப்பிடும் வியாதிகள் இனம்காணப்பட்ட பின்னர் அனைவருக்கும் முன்னெச்சரிக்கைக்காக போடப்படுகிறது.ஆனால் காய்ச்சல் அப்படி இல்லை. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முத்துலதா: என் வார்டு மக்கள் போகும்போது ரேசன் கடையில் கொடுக்கவேண்டிய பொருளை கொடுக்காமல் பற்றாக்குறை என்று கூறுகிறார்கள்.

சேர்மன்: சில நேரம் கையிருப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். விரைவில் வழங்கஏற்பாடு செய்கிறேன்.

முரளிதரன்: கடந்த வருடம் தினமலர் நாளிதழில் மகாராஸ்ட்ரா ஹை கோர்ட் உத்தரவு செய்திவந்தது. அதில் நகரில் சுற்றிதிரியும் நாய்கள் மற்றும் வெறி பிடித்த நாய்களை அடிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த விபரங்களை அந்த அரசிடம் கேட்டுப்பெற்று அதன்படி நாய்களை ஒழிக்கவேண்டும்.

சேர்மன்: அப்படி ஒரு அரசு மூலம் நாய்களை கொல்ல செய்தி வந்திருந்தால் நமது மண்டல அலுவலகத்திற்கும் தகவல் வந்திருக்கும் அது குறித்து நமது மண்டல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு மக்கள் சேவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

விஆர்எஸ் சுப்ரமணியன்: ரேசன் கார்டுகள் ஆய்வு சரியில்லை. பல இடங்களில் இன்னும் போலிகார்டுகள் உள்ளது.

சேர்மன்: இந்த பிரச்னை அந்த துறை சம்பந்தமானது. நமக்கு எது தேவையோ அதை மட்டும் கூறுங்கள்.

பார்த்திபன்: என் வார்டில் சாலைகள் சரியில்லை, நீங்களே வந்து பாருங்கள் புரியும்.

சேர்மன்: நான் வந்து பார்த்து உரிய சாலைகள் போட ஏற்பாடு செய்யப்படும். உங்கள் வார்டு மட்டுமில்லை அனைத்து வார்டுகளுக்கும் படிப்படியாக நிதி வரும் போது சாலைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

ராமசாமி: என் வார்டில் கொசுமருந்து அடித்து ஒரு மாதமாச்சு. அடுத்து அடிக்கபோவது எப்போது.

சேர்மன்: அனைத்து வார்டுகளுக்கும் முதல் தடவை மருந்து அடிக்கப்பட்டு சில இடங்களில் 2ம் தடவையும் அடிக்கப்பட்டு வருகிறது. 27 வார்டுகளுக்கும் 3 தடவை படிப்படியாக மருந்து அடிக்கப்படும்.

ராசேந்திரன்: என் வார்டு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீர் என் வார்டில் அதிகம் தேங்கி இருந்தது அனைவருக்கும் தெரியும் அதனால் ஒரு சில பகுதிகளில் சாலை வசதியும், சாக்கடை கால்வாயும் உடனே கட்டிதந்தால் மக்கள் பலன் அடைவர்.

சேர்மன் : உறுப்பினர் கோரிக்கை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டத்தில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சேர்மன் தனது இறுதி உரையின்போது அறந்தாங்கி நகரை பொறுத்தவரை எம்எல்ஏ உதவியுடன்,முன்னாள் மத்திய அமைச்சர் நிதியின் மூலம் பலகோடிக்கு கடந்த வருடம் மக்களுக்கு செய்துள்ளோம்.

அறந்தாங்கி நகரில் நாம் பொறுப்பேற்ற பின் பட்டியல் போடும் அளவிற்கு பணிகள் செய்து பணிகளும் நடந்து வருகிறது. அதற்கு முதல்வர், துணைமுதல்வருக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். மேலும் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தமிழக அரசின் ஒத்துழைப்புடன் சத்திரத்திற்கு சொந்தமான சந்தையை நம் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அதில் ஒரு பகுதி பஸ் ஸ்டாண்டாகவும் ஒரு பகுதியை நகராட்சி வருமானத்திற்கு ஒரு வழி ஏற்படுத்தும் வகையிலும் செய்வோம். என்றார். கூட்டத்தில் கவுன்சிலர் அமிர்தவள்ளி, ராசம்மாள், முத்துலதா, இளங்கோ, ரமேஷ், பார்த்திபன், நாராயணசாமி, கைலாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:40