Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை மாநகராட்சி விரிவு: வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயரும்?

Print PDF

தினமணி 31.12.2009

சென்னை மாநகராட்சி விரிவு: வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயரும்?

சென்னை, டிச. 30: சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவுபடுத்தப்படுவதன் மூலம், வார்டுகளின் எண்ணிக்கை 175-ஆக உயர வாய்ப்பு உள்ளது. இப்போது சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன.

உத்தேசிக்கப்பட்டுள்ள மாநகராட்சியின் புதிய வார்டுகள் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்படும் என்று தெரிகிறது. சென்னை மாநகராட்சி விரிவுபடுத்துவதன் மூலம் மக்கள் தொகை 80 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கத்திவாக்கம், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட 9 நகராட்சிகளும், புழல், நந்தம்பாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட 8 பேரூராட்சிகளும், 25 ஊராட்சிகளும் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன.

மாநகராட்சியின் இணைக்கப்பட உள்ள பகுதிகளுக்கான வார்டு எல்லைகளை நிர்ணயித்தல், மண்டலங்கள் அமைத்தல் மற்றும் வார்டுகளை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் மேற்கொள்வார் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள தேவைப்பட்டால் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்துக்கொள்ள ஆணையருக்கு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (டிச. 31) நடைபெறவுள்ள சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் இந்த அரசாணை பதிவு செய்யப்பட உள்ளது. அதன் பிறகு அதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தனிக் குழு: விரிவுபடுத்தப்படும் சென்னை மாநகராட்சி திட்டப் பணிகளை மேற்கொள்ள துணை ஆணையர் அளவில் உள்ள அதிகாரி ஒருவரை, சிறப்பு அதிகாரியாக மாநகராட்சி ஆணையர் நியமிப்பார் என்று தெரியவந்துள்ளது.

இந்த சிறப்பு அதிகாரியின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி, முதுநிலை திட்டப் பொறியாளர், சுகாதார அதிகாரி, கல்வித் துறை அதிகாரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால்வாய் துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய தனிக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள பகுதிகளில் எவ்வளவு பள்ளிகள், எங்கெங்கு அமைந்துள்ளன, சொத்துவரி எவ்வளவு வசூலிக்கப்படுகிறது, மருத்துவமனைகள் எவ்வளவு உள்ளன, புது மருத்துவமனைகள் எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகளின் பணி மூப்பு, மண்டல அலுவலகங்கள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வர்.

மேலும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, அதனடிப்படையில் வார்டுகளை பிரிப்பது மற்றும் மாநகராட்சி கவுன்சிலில் புதிதாக எவ்வளவு கவுன்சிலர்களை சேர்க்கலாம் என்பது குறித்தும் முடிவு செய்வர்.

இந்த முடிவுகள் அறிக்கையாக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்படும். பின்னர் திட்டமாக நிறைவேற்றப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில் 175 வார்டுகள்? சென்னை மாநகராட்சியில் இப்போது உள்ள 155 வார்டுகளில், வார்டுக்கான மக்கள் தொகையை மாற்றியமைப்பதன் மூலம் வார்டுகளின் எண்ணிக்கை 140 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் புதிதாக இணைக்கப்பட உள்ள நாகராட்சி மற்றும் ஊராட்சிகளை வார்டுகளாக பிரிக்கும் போது 35 வார்டுகள் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் விரிவுபடுத்தப்பட உள்ள சென்னை மாநகராட்சியில் 175 வார்டுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி விரிவுபடுத்தப்படுவதன் மூலம், இணைக்கப்படும் புதிய பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், மாநகராட்சிக்கு இணையான குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சொத்து வரி உயர்வதோடு, சொத்து வரி முறைகேடுகளும் முழுவதுமாக களையப்படும் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.

Last Updated on Thursday, 31 December 2009 10:22