Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளுக்கு நிரந்தர தடை

Print PDF

தினமணி 05.01.2010

மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளுக்கு நிரந்தர தடை

தூத்துக்குடி, ஜன.4: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகள் வைக்க நிரந்தரமாக தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த டபிள்யூ.ஜி.சி. சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்னால் எப்போதும் நான்கைந்து பெரிய அளவிலான விளம்பர பலகைகள் இருந்துகொண்டே இருக்கும். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்கள் விழாக்கள் தொடர்பான விளம்பர பலகைகளை வைக்கும் முக்கிய பகுதியாக இந்த இடம் திகழ்ந்து வருகிறது. எந்த நேரத்திலும் இப் பகுதியில் ஏதாவது சில விளம்பர பலகைகள் இருந்து கொண்டே இருக்கும்.

இதனால், மாநகராட்சி அலுவலகம் வெளியே தெரிவதில்லை. மேலும், சாலையோரத்தில் இந்த விளம்பர பலகைகள் இருப்பதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது.

இந்த விளம்பர பலகைகளில் பெரும்பாலானவை மாநகராட்சியின் அனுமதி பெறாமலேயே வைக்கப்படுகின்றன. எனவே, மாநகராட்சி அலுவலகம் முன் விளம்பர பலகைகளை வைக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கூறிவருகின்றனர். இதனை ஏற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு முன்னால் விளம்பர பலகைகள் வைக்க நிரந்தரமாக தடை விதிப்பது என மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Tuesday, 05 January 2010 10:29