Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு! முறைகேடுகள் அதிகரிக்கும் அபாயம்

Print PDF

தினமலர் 07.01.2010

மாநகராட்சி பணியாளர் பற்றாக்குறையால் பாதிப்பு! முறைகேடுகள் அதிகரிக்கும் அபாயம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் அமைச்சுப் பணியாளர்களின் பற்றாக்குறையால் பணிகள் பாதிக்கின்றன. முறைகேடுகள் நடக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.

மாநகராட்சி மத்திய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் பொறியியல், சுகாதாரம், வருவாய், நகரமைப்பு, ஓய்வூதியம் போன்ற துறைகளில், களப்பணியாளர்கள் தனியாக இருந்தாலும், நிர்வாக பணிகளுக்கு அமைச்சு பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

மாநகராட்சியில் பல ஆண்டுகளாக காலியாகும் அமைச்சுப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உதாரணமாக, 105 இளநிலை உதவியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 40 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். 75 பில் கலெக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், 23 பேர் மட்டுமே உள்ளனர். வரி வசூல் குறைவாக இருப்பதற்கும், புதிய கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருப்பதற்கும் இதுவும் ஒரு காரணம்.

அதே நேரத்தில், அதிகாரிகளின் எண்ணிக்கை இன்னொருபுறம் அதிகரித்துள்ளது. உதாரணமாக முன்பு 12 இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் இருந்த இடத்தில், இப்போது 32 பொறியாளர்கள் உள்ளனர். ஒரு செயற்பொறியாளர் இருந்த இடத்தில் மூன்று செயற்பொறியாளர்கள், ஒரு கண்காணிப்பு பொறியாளர் இருக்கின்றனர். ஒன்பது தொழில்நுட்ப உதவியாளர்கள் இருந்த இடத்தில் 23 பேர் தற்போது உள்ளனர்.
அமைச்சு பணியாளர்களில் பலர், ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளை கவனிக்க வேண்டி உள்ளது. சில பிரிவுகளில் தவறு நடக்க இதுவும் காரணம் ஆகிறது. உதாரணமாக, கணக்குப் பிரிவில் 30 பேர் பார்த்த பணிகளை நான்கு பேர் மட்டுமே கவனிக்கின்றனர். இப்பிரிவில் துப்புரவு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அனுப்பியதில் மோசடி செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர், நான்கு பதவிகளை கவனித்துள்ளார். இதுவே, மோசடி செய்வதற்கு அவருக்கு துணிவை கொடுத்துள்ளது.

பற்றாகுறையால் ரிங் ரோடு டோல்கேட்டுகளில், மாநகராட்சி ஊழியர்கள் யாரும் பணியில் இல்லை. முன்னாள் ராணுவத்தினர் மட்டுமே கட்டண வசூலில் ஈடுபட்டனர். அங்கு முறைகேடு நடக்க இதுவே காரணமாக இருந்தது.
கடந்த ஒரு வாரமாகத் தான் மாநகராட்சி ஊழியர்கள் டோல் கேட்டுகளில் கட்டண வசூலில் ஈடுபட்டனர். ஊழியர் பற்றாக்குறையால் மீண்டும் அவர்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டனர். இதனால் டோல்கேட்டுகளில் மீண்டும் முறைகேடுகள் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆள்பற்றாக்குறை நீடித்தால் மாநகராட்சியில் அபேஸ்கள் தொடரும்