Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உடுமலை அண்ணா பூங்காவில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

Print PDF

தினமணி 07.01.2010

உடுமலை அண்ணா பூங்காவில் ஆட்சியர் அதிரடி ஆய்வு

உடுமலை,ஜன.6: உடுமலை அண்ணா பூங்காவில் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதை தொடர்ந்து புதர் மண்டிக் கிடந்த பூங்கா ஒரே நாளில் பளிச்சென சுத்தமானது.

உடுமலை நகரின் முக்கியப் பகுதியாக விளங்கி வரும் ராஜேந்திரா சாலையில் அமைந்துள்ளது நகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்கா. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பூங்கா அருகிலேயே நகராட்சி நடுநிலைப் பள்ளி, அரசு மேல் நிலைப் பள்ளி, வாரச் சந்தை, ரயில் நிலையம் போன்றவைகள் அமைந்துள்ளன.

ஆனாலும் இந்த பூங்கா சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல நகராட்சி நிர்வாகங்கள் லட்சக்கணக்கில் நிதிகளை ஒதுக்கி பூங்காவை நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரில் நிதிகளை வீணடித்து வந்தனர்.

ஒவ்வொரு முறையும் பூங்காவை சுத்தம் செய்து அழகு படுத்துவதும் பின்னர் அதை முறையாக பராமரிக்கப்படாமல் விட்டு விடுவதும் வாடிக்கையாகி வந்தது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அந்த பகுதியில் நடமாடக் கூட முடியாத அளவிற்கு குற்றச் செயல்கள் நடந்து வந்தன. குறிப்பாக பூங்கா அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் பகல் நேரங்ளில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி புதன்கிழமை காலை அண்ணா பூங்காவிற்குள் நுழைந்து திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார்.

பூங்காவில் இருந்த அவலங்களை கண்ட ஆட்சியர் தொடர்புடைய நகராட்சி ஆணை யாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து பூங்காவை உடனடியாக சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து உடுமலை நகராட்சி ஆணையாளர் அ.சுந்தராம்பாள் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் முன்னிலையில் சுமார் 50 பேர் அண்ணா பூங்காவை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில மணி நேரங்களிலேயே உள்ளே புதர்மண்டிக் கிடந்த செடி கொடிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி பூங்காவை பார்வையிட்டார். அப்போது உடுமலை நகராட்சி தலைவர் செ.வேலுச்சாமி, வட்டாட்சியர் ஆ.கணபதி, ஆணையாளர் சுந்தராம்பாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: உடுமலை நகரில் பொதுமக்களின் ஒரே பொழுது போக்கு இடமான பூங்காவை நவீனப் படுத்தவும், பொதுமக்கள் சகஜமாக வந்து போகவும் ஒரு சில ஏற்பாடுகளை செய்து தர நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பணிகளை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Thursday, 07 January 2010 10:47