Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சல் பரிசோதனைக்கு மதுரை மருத்துவக்குழு இன்று வருகை : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

Print PDF

தினமலர் 08.01.2010

கடையநல்லூரில் வைரஸ் காய்ச்சல் பரிசோதனைக்கு மதுரை மருத்துவக்குழு இன்று வருகை : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடையநல்லூர் : கடையநல்லூரில் காணப்பட்டு வரும் காய்ச்சல் பரிசோதனைக்காக மதுரையில் இருந்து இன்று (8ம் தேதி) சிறப்பு மருத்துவக் குழு வருகைதர இருப்பதாக தமிழக சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் கடையநல்லூரில் சிக்-குன்-குனியா, டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

கடையநல்லூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காணப்பட்டு வரும் மர்மக் காய்ச்சல் தொடர்பாக ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடையநல்லூர் மட்டுமின்றி மாவட்டத்தில் பரவலாக இருந்து வரும் மர்மக் காய்ச்சல் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியிடம் தொகுதி எம்.எல்..பீட்டர் அல்போன்ஸ் கேட்டுக் கொண்டதையடுத்து தமிழக சுகாதார அமைச்சர் பன்னீர்செல்வம், சுகாதார துறை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோரை நேரில் சென்று ஆய்வு செய்திட முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதையடுத்து கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார்.

கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பத்மபாலா என்ற சிறுமியிடம் காய்ச்சல் தொடர்பாக கேட்டறிந்தார். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று பார்வையிட்ட அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான், மாவட்ட கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் ஆஸ்பத்திரியை ஒட்டி அமைந்துள்ள பாப்பான் கால்வாயில் காணப்பட்ட சுகாதாரமற்ற நிலையினை பார்வையிட்டனர்.

தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களுடன் சுகாதார துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான், சுகாதார துறை செயலாளர் நந்தகோபாலன், இயக்குனர் இளங்கோ, மாவட்ட கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பணியிடம் உள்ளிட்ட பணியாளர்கள் விபரம் தொடர்பான தகவல்களை அமைச்சர்கள் கேட்டறிந்ததுடன் காய்ச்சல் தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதாவது:- கடையநல்லூர் பகுதிகளில் காணப்பட்டு வந்த காய்ச்சல் தொடர்பாக தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரிடையாக கேட்டுக் கொண்டதையடுத்து ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான சிகிச்சையினை அளிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும், குடிநீர் குளோரினேசன் செய்து வழங்கிடவும், கொசுமருந்து தெளித்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லூரில் காணப்பட்டு வரும் காய்ச்சல் டெங்கு, சிக்-குன்-குனியா, எலி ஆகிய காய்ச்சல்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருந்தபோதிலும் மதுரையில் இருந்து ஐசிஎம்ஹெச் சிறப்பு மருத்துவக்குழு இன்று (8ம் தேதி) கடையநல்லூரில் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் எந்த பீதியும் அடைய வேண்டாம். இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அமைச்சருடன் சுகாதார பணிகள் இணை இயக்குனர் உஷா ரிஷபதாஸ், துணை இயக்குனர்கள் மீரான்மைதீன், சண்முகசுந்தரம், தென்காசி ஆர்.டி.. மூர்த்தி, நகராட்சி சேர்மன் இப்ராகிம், கமிஷனர் அப்துல் லத்தீப், நகர செயலாளர் செயலாளர் முகமதுஅலி, எம்எல்ஏ அலுவலக மேலாளர் புலவர் செல்வராஜ், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் ஜவஹர் நிஷா, சொக்கம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரவி, செங்கோட்டை நகராட்சி சேர்மன் ரஹீம், கவுன்சிலர்கள் அந்தமான் சாகுல்கமீது, முகைதீன்பிள்ளை மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

கலெக்டர் கொடுத்த போஸ்ட் கார்டு லெட்டர்.... கடையநல்லூரில் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காய்ச்சல் பாதித்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், மைதீன்கான் ஆகியோர் சுகாதார பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து கமிஷனர் அப்துல்லத்தீப் அமைச்சரிடம் தெரிவித்து வந்தார்.

அப்போது கலெக்டர் ஜெயராமன் போஸ்ட் கார்டு கடிதம் ஒன்றை எடுத்துக் காட்டி ஆஸ்பத்திரியில் அருகில் அமைந்துள்ள பாப்பான் கால்வாயில் காணப்படும் சுகாதார கேட்டினால்தான் அதிகம் பாதிப்பு என அந்த லெட்டரில் இருப்பதாக தெரிவித்து போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களுக்குள் முழுமையாக சுத்தம் செய்திட கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து கொசுமருந்து அடித்திட விருதுநகரில் இருந்து இரண்டு ராட்சத மிஷின்கள் கொண்டு வந்த கொசுக்களை அழித்திட அமைச்சர் உத்தரவிட்டார். அமைச்சர்கள் நேற்று மாலை கடையநல்லூர் வருகை தந்ததை பரவலாக கேள்விப்பட்ட பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், பொதுநல அமைப்பினரும் அரசு ஆஸ்பத்திரி முன் குவிந்ததால் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.

Last Updated on Friday, 08 January 2010 07:51