Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தூத்துக்குடியில் ரூ. 87 லட்சம் செலவில் 7 பூங்காக்கள் சீரமைப்பு

Print PDF

தினமணி 11.01.2010

தூத்துக்குடியில் ரூ. 87 லட்சம் செலவில் 7 பூங்காக்கள் சீரமைப்பு

தூத்துக்குடி, ஜன. 10: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 7 பூங்காக்கள் ரூ. 87 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள பழமையான மாநகராட்சி ராஜாஜி பூங்கா ரூ. 24 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதில், புல்வெளி, நடைமேடை, அலங்கார நுழைவாயில், சுற்றுச்சுவர், கிரானைட் இருக்கைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பூங்காவில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள். ஆதலால் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

பூங்காவை திறந்து வைத்து அமைச்சர் பி. கீதா ஜீவன் பேசியது: பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 7 பூங்காக்கள் ரூ. 87 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி ரோச் பூங்காவில் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறந்து வைக்கப்படும் என்றார் அமைச்சர். பூங்காவிற்கான கல்வெட்டை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் திறந்து வைத்தார்.

விழாவில், மேயர் இரா. கஸ்தூரி தங்கம், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர் என். பெரியசாமி, துணை மேயர் தொம்மை ஜேசுவடியான், ஆணையர் பெ. குபேந்திரன், பொறியாளர் ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 11 January 2010 07:05