Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வீட்டு பால்கனியில் துணி உலர்த்த தடை

Print PDF

தினகரன் 12.01.2010

வீட்டு பால்கனியில் துணி உலர்த்த தடை

மும்பை : அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களில், வீட்டு பால்கனியில் துணிகளை உலர்த்தினால் அபராதம் விதிக்கும் மும்பை மாநகராட்சியின் புதிய திட்டத்துக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பை நகரை அழகாக்க மாநகராட்சியும் மாநில அரசும் பல திட்டங்களை தீட்டி உள்ளன. சாலையின் நடுவே உள்ள மீடியனில் அழகிய பூச் செடிகளை வளர்ப்பது, நடைபாதைகளை அழகுபடுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலைகளை எவ்வளவுதான் அழகுபடுத்தினாலும், அடுக்குமாடி கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் சலவை செய்த துணிகளை வீட்டு பால்கனியில் உலர்த்துவது நகரத்தின் அழகையே கெடுப்பதாக அதிகாரிகள் கருதினர். இதனால், முக்கிய சாலைகளில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பால்கனிகளில் துணிகளை உலர்த்த தடை விதிக்க மாநகராட்சி திட்டமிட்டது.

இது தொடர்பான மாநகராட்சியின் பரிந்துரைக்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பால்கனிகளில் துணி உலர்த்த விரைவில் தடை விதிக்கப்படும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. தடையை மீறி வீட்டு பால்கனியில் துணிகளை உலர்த்தினால் அபராதம் விதிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.