Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குறுந்தொழில் கூடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமணி 16.01.2010

குறுந்தொழில் கூடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

கோவை, ஜன.13: கோவை வரதராஜபுரம் பகுதியில் 9 குறுந்தொழில்கூடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப் பிரச்னையில் மேயர் தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என்று கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மேயர் ஆர்.வெங்கடாசலத்திடம், காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார் புதன்கிழமை கொடுத்த மனு:

கோவை நகரில் இயங்கும் குறுந்தொழில்கூடங்களில் 90 சதவீதம் குடியிருப்பு பகுதிகளில் தான் இயங்கி வருகின்றன. இவற்றில் லேத் மிஷின், மில்லிங் மிஷின், சேப்பிங் மிஷின் உள்ளிட்ட இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.இந்த இயந்திரங்களில் சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவுக்கு சப்தமோ அல்லது கழிவுநீரோ வெளியேறுவதில்லை. ஆனால், குடியிருப்புகளில் வசிக்கும் சிலர், குறுந்தொழில்கூடங்கள் மீது வேண்டுமென்றே புகார்களை எழுப்பி வருகின்றனர்.

தங்களது முன்விரோதங்களை மனதில் கொண்டு இதுபோன்ற புகார்களை அளித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவம் வரதராஜபுரம் பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்டது. அப் பகுதியை சேர்ந்த சிலர் மாநகராட்சி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் நகர்நலத்துறை சார்பில் 9 குறுந்தொழில்கூடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிறுவனங்களை வேறு இடத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில அரசு சார்பில் குறுந்தொழில்கூடங்களுக்கு தனி தொழிற்பேட்டை அமைத்துத்தர அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

எனவே, குறுந்தொழில்பேட்டை அமைக்கும் வரை குறுந்தொழில்கூடங்களை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக்கூடாது. இப்பிரச்னையில் மேயர் தலையிட்டு நியாயமான தீர்வுகாண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.