Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மூலக்கரையில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

Print PDF

தினமணி 20.01.2010

மூலக்கரையில் நவீன எரிவாயு தகன மேடை திறப்பு

மதுரை, ஜன.19: மதுரை மூலக்கரையில் ரூ.2.08 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையை செவ்வாய்க்கிழமை மேயர் கோ.தேன்மொழி திறந்து வைத்தார்.

மூலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் எஸ்.செபாஸ்டின் பேசியதாவது:

உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள மயானங்களை மேம்படுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி, மதுரை மாநகராட்சியில் உள்ள மூலக்கரை மயானம் சுமார் 2.70 ஏக்கர் பரப்பில் ரூ.2.08 கோடி மதிப்பில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

எழில்மிகு தோற்றத்துடனும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையிலும் 100 அடி உயரத்துக்கு மேல் புகைப்போக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர எரியூட்டப்படும் சடலத்தில் இருந்து சாம்பல் வெளியேறாமல் புகை மட்டும் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக நவீன குளியலறைகள், கழிப்பறை, வாகன நிறுத்துமிடங்கள், முடி எடுக்கும் இடம், சமையலறை, தொலைபேசி மற்றும் குளிர் வசதியுடன் ஆம்புலன்ஸ் வாகனம், வாகனம் சுத்தம் செய்யும் மையம் என அனைத்து வசதிகளும் இங்கு உள்ளது.

ஒரேநேரத்தில் இரு சடலங்களை எரிக்கலாம். எரியூட்டுவதற்கு வாகன வசதி உள்பட அனைத்தும் சேர்த்து ரூ.1,350 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி எல்லையைத் தாண்டி கொண்டுவரப்படும் சடலத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 மட்டும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படும் என்றார்.

மேயர் கோ.தேன்மொழி பேசுகையில், திமுக அரசு ஏழை மக்களுக்கு கருவறை முதல் கல்லறை வரை எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இந்த மயானத்தைப் பொதுமக்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர் என்.நன்மாறன், மண்டலத் தலைவர்கள் குருசாமி, இசக்கிமுத்து, மாணிக்கம், தலைமைப் பொறியாளர் சக்திவேல், வேலைக்குழுத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 20 January 2010 10:31